ஒவ்வொரு சமுதாய மக்களின் சடங்கு முறைகளும், சடங்கு முறைகளில் அவர்கள் பரிமாறப்படும் உணவு முறைகளும் வேறுபடுகிறது. அப்படி தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களின் திருமண விருந்தில் இந்த சொதி பெரும்பாலும் பரிமாறப்படும். திருமணம் முடிந்து மணமகன் வீட்டார் விருந்தில் இந்த சொதி குறிப்பாக பரிமாறப்படுகிறது.


முழுக்க முழுக்க தேங்காய் பாலில் செய்யப்படும் இந்த சொதி குழம்பானது விருந்துக்கு அதீத சுவையை கொடுக்கிறது.  குறைய சோறு நிறைய சொதி குழம்பு ஊற்றி, திகட்ட திகட்ட சாப்பிடுவதால் தித்திப்பு அதிகமாக இருக்கும். பொதுவாக தேங்காய்ப்பால் விரைவில் செரிமானமாகாது என்பதால் விரைவில் செரிக்கக்கூடிய இஞ்சிப்பஞ்சடியும் கூடவே விருந்தில் இடம்பெறும். அதோடு உருளைக்கிழங்கு பொரியலும் பறிமாறப்படும். இந்த மூன்றும் கறி விருந்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் நிறைவைக் கொடுக்கும். அப்படிப்பட்ட சொதி குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இன்று பார்க்கலாம். 


சொதி குழம்பு செய்ய தேவையான பொருட்கள் : 


தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் 


சின்ன வெங்காயம் – 25


பூண்டு – 5 பற்கள்


உருளைக்கிழங்கு – 1


பட்டாணி – ஒரு கப்


கேரட் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)


பீன்ஸ் – ஒரு கப்


முருங்கைக்காய் – 1


கத்தரிக்காள் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)


பச்சை மிளகாய் - இஞ்சி விழுது – ஒரு ஸ்பூன்


உப்பு – தேவையான அளவு


தேங்காய் பால் – 2 கப் (முதல் மற்றும் இரண்டாவது பால்)


வேகவைத்த பாசிப்பருப்பு – ஒரு கப்


எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்


தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்


தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்


கடுகு – கால் ஸ்பூன்


கறிவேப்பிலை – ஒரு கொத்து.





சொதி குழம்பு செய்முறை : 


ஒரு கடாயினை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவேண்டும். பின்னர் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிட்டு, பச்சை மிளகாய் இஞ்சி விழுது சேர்க்கவேண்டும். உப்பு சேர்த்து கலந்து, இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி 10 நிமிடம் வேகவிடவேண்டும்.


வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். பின்னர் இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டு பிறகு அதில் முதல் முறையாக எடுத்து தேங்காய் பால் சேர்த்து கலந்துவிட வேண்டும். அடுத்தப்படியாக தாளிப்பதற்கு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவேண்டும். பின்னர் தாளிப்பை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் கழித்து சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.  அவ்வளவுதான் கமகமக்கும் சுமையான சொதி குழம்பு தயார். இந்த சொதிக்குழம்பை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், உப்புமா என எதற்கு தொட்டு சாப்பிடாலும் அதன் சுவை அள்ளும். காரம் குறைந்த ஒரு உணவு வகை என்பதால் இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.. இந்த டிஸ்ஸ நீங்களும் இப்பவே செய்து அசத்துங்க மக்களே...!