நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்திருக்கும் பிரபல அசைவ உணவக (NSK BIRIYANI) கடையில் உணவு சாப்பிட சென்றுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி ஆர்டர் செய்த நிலையில் பிளேட்டர் (அனைத்து வகை அசைவ தந்தூரி உணவு கலவை) ஒன்றும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.


கெட்டுப்போன தந்தூரி சிக்கன்:


அந்த உணவை எடுத்து சாப்பிட முயலும் போது அதிலிருந்த தந்தூரி சிக்கனில் கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக கடை ஊழியரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது  தவறுதலாக வந்துவிட்டது என்றும், இதனை நாங்கள் திருப்பி எடுத்துக் கொள்கிறோம், பணம் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.


ஆனால் உணவு ஆர்டர் செய்தவர்கள் இந்த உணவை சாப்பிட்டு இருந்தால் என்ன ஆயிருக்கும் இதுபோல் எத்தனை நபர்களுக்கு துர்நாற்றம் வீசிய பொருட்களை கொடுத்தீர்கள் என கேள்வி கேட்டதுடன் கடையின் உரிமையாளரை அங்கிருந்த படியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


பழைய கோழிக்கறி:


அதில் கடை உரிமையாளரிடம் உணவு ஆர்டர் செய்த நபர் பேசும் பொழுது, ` எஸ்பி ஏட்டையா பேசுகிறேன் அழுகிய தந்தூரியை தந்துள்ளனர் என்று கூறுகிறார்.  இதை மகன் சாப்பிட்டு ஏதாவது ஒன்று என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, பழசை வைக்க மாட்டார்கள், நான் பேசிவிட்டு வருகிறேன் என்கிறார் கடை உரிமையாளர், கடையில் தான் இருக்கிறேன். கடையில் உள்ளவர்களிடம் பேசுங்கள் என்று கூற கடையின் உரிமையாளர் ஊழியரிடம் பேசுகிறார்.


அப்போது கடையின் உரிமையாளரிடம் ஊழியர் அளித்த தகவல்கள் அதிர்ச்சி அளித்துள்ளது.  அதில் என்னைக்கு  உள்ள சிக்கன் என்று கடை உரிமையாளர் கேட்க, முந்தா நாள் ( நேற்று முன் தினம்) உள்ள சிக்கன் என்று சொல்கிறார் ஊழியர். அதை எப்படி வைக்கலாம் என்று அவரிடம் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.




மேலும் உணவு ஆர்டர் செய்த அந்த நபர் தொலைபேசி மூலம் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்த நிலையில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள் அப்போதுதான் மேல்நடவடிக்கை எடுக்க முடியும் என அவர்களும் தட்டிக் கழித்தாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் விடுமுறை நாட்கள் தொடங்கி உள்ள நிலையில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் நபர்கள் பலர் உணவு விடுதிகள் மற்றும் ஹோட்டல்களிலேயே உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். இது போன்ற வேலையில் கெட்டுப்போன பொருட்களை கடையில் வைத்திருந்து கடை உரிமையாளர்கள் விற்பனை செய்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெரும் அதிர்ச்சி:


கெட்டுப்போன பொருள் என தொலைபேசியில் புகார் அளித்தும் நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிறிய கடைகளை மட்டும் குறி வைத்து ஆய்வு செய்யாமல் பெரிய கடைகளிலும் சீரான இடைவெளியில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.  நெல்லையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள பிரபல அசைவ உணவகத்தில் கெட்டுப்போன தந்தூரி சிக்கன் விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.