ஜெயக்குமார் உயிரிழப்பு தொடர்பாக உறவினர்கள் மற்றும் மகன்களிடம் விசாரணையானது நடைபெற்று வரும் சூழலில்  அவர் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து அவர் கடைசியாக வாங்கிச் சென்ற டார்ச் லைட் கிடைத்துள்ளது. அதுவும் முற்றியிலும் எரிந்த நிலையில் அதிலுள்ள பேட்டரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.


மர்மம் விலக்குமா டார்ச் லைட்?


இது அவர் வாங்கி சென்ற டார்ச் லைட் தானா என்று விசாரணையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜெயக்குமார் உயிரிழந்தது முதல் பல்வேறு தடயங்களும், விசாரணையில் பல்வேறு தகவல்களும் கிடைத்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் 8 நாட்களை கடந்தும் இந்த வழக்கில் துப்பு துலங்காத  நிலையில் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


தொடரும் சிக்கல்:


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்த விவகாரத்தில் தற்போது வரை பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ளது. முதலில் ஜெயக்குமார் எழுதியதாக அடுத்தடுத்து இரண்டு கடிதங்கள் வெளியாகியது. அதில் தற்கொலையாக இருக்கலாம் என முதலில் காவல்துறையினர் விசாரணையை துவங்கிய நிலையில் அதன் பின் கடந்த மார்ச் மாதம் அவர் கைப்பட எழுதிய மற்றொரு கடிதம் கைப்பற்றப்பட்டது.


இரண்டிலும் உள்ள கையெழுத்தும் வித்தியாசமாக இருந்த நிலையில் அதில் பல்வேறு கேள்விகள் எழுந்தது. மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து கட்சியினர், தொழிலதிபர்கள் என குறிப்பிட்ட சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையில் காவல்துறையினர் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வந்தனர். 




 


அதன்பின் பிரேத பரிசோதனை அறிக்கையும், அவர் இறந்த நிலையில் கை, கால்கள், கழுத்து ஆகியவை கட்டப்பட்ட நிலையில் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியான நிலையில் இந்த இரண்டு தகவல்களின்படி அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர் அதனடிப்படையில் விசாரணையின் கோணத்தை மாற்றியுள்ளனர். காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டு விசாரணையானது நடந்து வரும் நிலையில் தற்போது வரை அந்த வழக்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.


இன்னும் விலகாத மர்மம்:


இதற்கிடையில் ஜெயக்குமார் 2ஆம் தேதி முதல் காணாமல் போனதாக மகன் புகாரளித்திருந்த  நிலையில் அன்று இரவே அவர் திசையன்விளை அருகே உள்ள கடை ஒன்றிற்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. பின் அவர் என்ன ஆனார் ? எங்கு சென்றார் என்று  தெரியவில்லை. அதன்பின் தற்போது அவர் கடைக்குள் வந்து டார்ச் லைட் ஒன்றை வாங்கி செல்லும் முழு காட்சிகளும் வெளியானது. அதன்பின் அவர் கார் எங்கெங்கு சென்றது என்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அதன்பின் ஜெயக்குமார் வீடு திரும்பாத நிலையில் அவர் வெளியே எடுத்து சென்ற கார் வீட்டின் அருகே நின்றது எப்படி? கார் சாவியை எங்கே? 


அவரது செல்போன் எங்கே? அவரது செல்போன் சிக்னல் இறுதியாக எங்கு நிறுத்தப்பட்டது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து அவரது தோட்டத்தில் கேன் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதன்பின் கிணற்றிலிருந்து தண்ணீரை முற்றிலுமாக வெளியேற்றிய நிலையில் கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜெயக்குமார் உயிரிழந்து கிடந்த இடத்தில் டார்ச் லைட் கைப்பற்றப்பட்டுள்ளது. அது ஜெயக்குமார் இறுதியாக வாங்கிச் சென்ற டார்ச் லைட் தானா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.