நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு உயர் மட்ட குழு விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் அவர்களை நியமித்துள்ளது. இதனை அடுத்து நேற்று திருநெல்வேலி வந்துள்ள விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ள சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இருவரிடமும் இதுவரை நடந்த விசாரணை குறித்த தகவல் கோப்புகளை பெற்றுக்கொண்டார். அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வந்து புகார் அளிக்கலாம் இதுவரை புகார் அளிக்காதவர்களும் வந்து புகார் அளிக்கலாம். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் வாட்ஸ் அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் நாள் விசாரணையை அமுதா IAS தொடங்கினார். இதனை அடுத்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இருந்து உதவி காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி மற்றும் நிலைய எழுத்தர் வின்சென்ட் இருவரும் விசாரணை நடைபெற்று வரும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர் . அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துக்களை விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் இடம் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக உயர் மட்ட குழு விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் வருவாய்த் துறையினர் கட்டுப்பாட்டில் வந்தது. காவல் பணியில் காவலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் இன்று நடைபெற்ற விசாரணையில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் யாரும் வராத நிலையில் விசாரணை நடைபெறும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டார் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார்.. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து யாரும் விசாரணைக்கு வராத நிலையில் மீண்டும் விசாரணை நடைபெறுமா இல்லையா என்பது குறித்த தகவல் அதிகாரிகள் தரப்பில் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை..
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் பொழுது, உயர் மட்ட குழு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் விசாரணையை புறக்கணிக்கிறோம். ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி பாதிக்கப்பட்டவர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் மீண்டும் விசாரணை என்பது தேவையற்றது. ஏ.எஸ்.பி க்கு எதிராக சாட்சியம் சொன்னவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அம்பாசமுத்திரம் உதவி ஆய்வாளர் ஒருவர் நேரடியாக சென்று அவர்களை தொழில் செய்யவிடாமல் மிரட்டுகிறார். சிசிடிவி காட்சிகளை பார்த்த அதிகாரி ஒருவர் அதனை அழிக்க கூறியிருக்கிறார்.அவர் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம். சார் ஆட்சியர் விசாரணை மீது எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கை இல்லை. சார்ஆட்சியரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்கள். மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஏ.எஸ்.பி மட்டுமில்லாமல் இதில் தொடர்புடைய 15க்கும் மேற்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.