நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இன்றைய மாணவர்கள் போதை போன்ற தவறான வழியில் செல்வதை தடுக்க ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்களுக்கு ஐந்து நிமிடம் அறிவுரைகள் வழங்குங்கள் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் குழந்தைகளை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்காக திருப்புமுனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பதற்காக தொடர்ந்து பல நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு, சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக திருப்பு முனை திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை குழந்தை நேய மாநிலமாக மாற்ற முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் குழந்தை திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்ற அவர், இருந்த போதும் தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர், இதனை கட்டுபடுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்களை படிக்க வைப்பது மட்டும் நோக்கமாக இல்லாமல் அவர்களை நல்வழி படுத்த வேண்டும். மது அருந்துவது தெரிந்த உடனே அந்த மாணவனை நல்வழிபடுத்த உரிய ஆலோசனைகளை வழங்குங்கள். ஒழுக்கமில்லாமல் வெறும் படிப்பை வைத்து மாணவர்கள் என்ன செய்ய முடியும் எனவே மாணவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அவர்களுக்கு ஆலாசனைகள் கொடுங்கள். மதுவிலிருந்து மீளமுடியும், கஞ்சா போன்ற போதையிலிருந்து மீள முடியாது. எனவே மாணவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். 18 வயதுக்கு முன் திருமணம் குழந்தை திருமணம் செய்வதை தடுக்க ஆலோசனை வழங்குங்கள்” என்று கூறினார்.
முன்னதாக பள்ளி 385 மாணவிகளுக்கு ரூ. 19 லட்சத்து 21ஆயிரத்து 920 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், ஆணையர் சாருஶ்ரீ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்