தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆகஸ்ட் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், மாவட்ட பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




மாவட்டத்தின் மழை அளவு, அணைகளின் நீர் இருப்பு, மாவட்டத்தில் நடைபெறும் வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் விளக்கி கூறினார். தொடர்ந்து கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் செந்தில் ராஜ் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் 2020- 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு தொகை பாசிப்பயறு, கம்பு, சோளம், எள், நிலக்கடலை, சூரியகாந்தி, பருத்தி உள்ளிட்ட சில பயிர்களுக்கு மட்டும் ரூ.50 கோடி அளவுக்கு இன்னும் வரவேண்டியுள்ளது. இந்த தொகையை மாநில அரசே முழுமையாக விடுவித்திடவுள்ளது. இத்தொகை இன்னும் ஒரு வார காலத்துக்குள் வந்துவிடும். விவசாயிகளின் உரத் தேவையை கருத்தில் கொண்டு கடந்த வாரம் 2,955 டன் டிஏபி உரம் மாவட்டத்துக்கு வரப்பெற்றுள்ளது. இதில் 66 சதவீதம் தொடக்க வேளாண்மை கடன் சங்களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. மேலும், உரம் முறையாக விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க உரக்கடைகளில் தொடர்ந்து சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். 




தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசினார். வில்லிச்சேரியை சேர்ந்த பிரேம்குமார் என்ற விவசாயி பேசும்போது, “இந்த கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமாக நடைபெறவில்லை. வெறுமனே விவசாயிகளின் குறைகளை கேட்டும் கூட்டமாகவே நடைபெறுகிறது. விவசாயிகள் கேட்கும் கேள்விகள் சரியான துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் பெறப்படுவதில்லை. சம்பந்தமில்லாத துறைகளுக்கு கேள்விகளை அனுப்புவதால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுவதில்லை.வேளாண்மை துறையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு துறை முறையாக செயல்படவில்லை. வேளாண்மை துறை சார்பில் விநியோகிக்கப்படும் இடுபொருட்களே தரமில்லாதவையாக உள்ளன. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதில் முறையாக மண் பரிசோதனை செய்து அனுமதி அளிக்காததால் பலவேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது” என்றார்.




இவைகளுக்கு பதிலளித்த ஆட்சியர் செந்தில் ராஜ், “வரும் காலங்களில் இதுபோன்ற குறைகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள குளங்களில் வேளாண்மை துறை மூலமே மண் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.


மாரியப்பன் என்ற விவசாயி பேசும்போது, “கூட்டுறவு சங்கங்களில் ஒரு மூட்டை டிஏபி உரம் வாங்கினால், நானோ யூரியா அல்லது ஏதாவது ஒரு இணை உரத்தை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். உரம் தேவையானால் நாங்கள் வாங்கிக் கொள்வோம். எங்கள் மீது திணிக்கக்கூடாது” என்றார்.


கயத்தாறு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் பேசும்போது, கயத்தாறு பகுதியில் உள்ள வெள்ளாளங்கோட்டை கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்ட ஒரு குறிப்பிட்ட நிறுவன பருத்தி விதைகள் தரமற்றவையாக இருந்ததால், பயிர்கள் காய் பிடிக்கும் பருவத்தில் கருகிவிட்டன. இதனால் 13 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.இதற்கு பதிலளித்த வேளாண் இணை இயக்குநர் முகைதீன், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க விதை நிறுவனத்துக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார்.




தொடர்ந்து பேசிய வில்லிச்சேரி பிரேம்குமார், “தரமற்ற விதை பிரச்சினை கயத்தாறு பகுதியில் மட்டுமல்ல. மாவட்டம் முழுவதுமே உள்ளது. விதைகளை விற்பனை செய்யும் போது உத்தரவாத (கேரன்டி அட்டை) கார்டு வழங்க வேண்டும்” என்றார். தரமற்ற விதைகள் தொடர்பாக மாரியப்பன் உள்ளிட்ட மேலும் சில விவசாயிகளும் எழுப்பினர்.இதற்கு பதிலளித்த வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர், சான்றளிக்கப்பட்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு பரிந்துரை செய்கிறோம். 70 சதவீதத்துக்கு குறைவான முளைப்பு திறன் கொண்ட விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதில்லை என்றார் அவர். ஆனால், கேரன்டி கார்டு வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதையடுத்து குறுக்கிட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் அடுத்த பருவம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த பருவத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை கிடைப்பது உறுதி செய்யப்படும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு சான்று அளிக்கப்பட்ட தரமான விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.




உடன்குடியை சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் பேசும்போது, உடன்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் வேளாண் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து முறையாக ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பதலளித்த ஆட்சியர் பொதுப்பணித்துறை மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.




சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மகா பால்துரை உள்ளிட்ட விவசாயிகள், சடயநேரி கால்வாய் உபரிநீர் கால்வாயாக உள்ளது. வெள்ளக் காலங்களில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது வேளாண்மை பரப்புகள் குறைந்துவிட்டன. எனவே, சடயநேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்ற அரசுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது தாமிரபரணி ரெகுலர் பாசன பகுதிகளை சேர்ந்த சில விவசாயிகள் எழுந்து, சடயநேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றினால், தாமிரபரணி ரெகுலர் பாசன பகுதிகள் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட ஆட்சியர், இருதரப்பு கருத்துக்களையும் கவனத்தில் கொண்டுள்ளோம் என்றார்.