தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். காலை 10 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுவாமி தரிசனம் செய்த அவர் அங்கிருந்து சென்னை செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி விமான நிலையம் வரக்கூடிய பகுதிகளில் அதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.




விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நேர்மையான காவல்துறை அதிகாரி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அவரை விருதுக்கு பரிந்துரைத்து உள்ளதாக முன்னாள் டிஜிபி தெரிவித்துள்ளார். உயர் காவல்துறை அதிகாரிகள் பேசும்போது அவர் மன அழுத்தத்தில் கடந்த மூன்று மாதங்களாக இருந்ததாக தெரிவிக்கிறார்கள். அவ்வாறு மன அழுத்தத்தில் இருந்த நபரை ஏன் பணியமர்த்த வேண்டும். ஏற்கனவே மன அழுத்தம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு பணி காரணமாக கூடுதல் அழுத்தமும் சேர்ந்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பெங்களூரு மருத்துவமனை மூலமாக காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நலவாழ்வு திட்டம் அமலில் இருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை நீக்கிவிட்டதாக தெரிகிறது. ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட நலவாழ்வு திட்டம் மூலமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. டிஐஜி உயிரிழப்பு குறித்து தற்கொலையா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் சிபிஐ கொண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்.




அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளது குறித்து கேட்டதற்கு, தற்போது சட்ட மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் அமைச்சராக உள்ள ரகுபதி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது. ஊழல் செய்த ஒருவர் அதைப் பற்றி பேச அருகதையற்றவராக இருக்கிறார். ஊழல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒருவர் எந்த வகையில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறையின் அமைச்சராக இருக்கலாம். அந்த துறை அவரிடம் இருப்பதே தவறானது. முன்பு திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்தது தொடர்பாக புரட்சித்தலைவி ஆட்சியில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளுக்கு 15 ஆண்டுகளாக வாய்தா பெற்று வந்த திமுக அமைச்சர்கள் தற்போது திமுகவினர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டதன் காரணமாக அந்த வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று உள்ளனர். திமுகவினர் அரசு வழக்கறிஞராக உள்ளதால் நீதிமன்றத்தில் வாதங்களை சரியாக எடுத்து வைக்காததால் இந்த விடுதலை அவர்களுக்கு கிடைக்கிறது என்றார்.




மகளிர் உரிமைத் தொகை வருமா என்பது சந்தேகம். ஏராளமான நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள் அவர்கள் கொடுக்கட்டும் பார்க்கலாம். கவர்னர் டெல்லி சென்றுள்ளது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான பூர்வாங்க பணிகளை அதிமுக துவங்கிவிட்டது. ஊர் கமிட்டி அமைப்பது மகளிர் பாசறை போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த இருக்கிறோம். தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கிறது என பதில் அளித்தார்.


அதிமுகவினர் பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையாக செயல்படுகின்றனர் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது குறித்த கேள்விக்கு, அவர்கள் தான் அடிமையாக இருக்கிறார்கள் வருமான வரித்துறை அமலாக்கத்துறை விசாரணையை கண்டு பயந்து போய் இருக்கிறார்கள் கடந்த 20 நாட்களாக  எனது அறிக்கைக்கு கூட பதில் அறிக்கை இல்லை அனைத்து அமைச்சர்களும் நடுங்கி போய் இருக்கிறார்கள். 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார்களா இல்லையா ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்தார்கள் பிறகு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை மாற்றிக் கொண்டார்கள் கொள்கை கோட்பாடு எதுவும் இல்லாத கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது அதிகாரம் பதவி இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது ஆட்சிக்கு வருவதற்காக எதையும் செய்வார்கள் என விமர்சித்தார்.




போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்த நிலையில் தற்போது பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களே என்பது குறித்த கேள்விக்கு, இரண்டு ஆண்டுகளாக அவர்கள் அரசாங்கமே நடத்தவில்லை எப்படி ஊழல் செய்வது என்பதை மட்டுமே அவர்கள் செய்தார்கள். ஒப்பந்த தொழிலாளர்களையும் பார்க்கவில்லை மக்களையும் பார்க்கவில்லை தற்போதும் உள்ள சூழல் குறித்து முதலமைச்சருக்கு எதுவும் தெரியாது. அவர் பொம்மை முதலமைச்சர் நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சர் இவர் தான். எழுதி   கொடுப்பதை அப்படியே படித்து விட்டு செல்வார் என்றார்.


விலைவாசி உயர்வு பற்றிய கேள்விக்கு, திமுக அரசு எப்போதெல்லாம் பதவிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் விலைவாசி உயரும். சரியான நிர்வாகம் இல்லாததே விலைவாசி உயர்வுக்கு காரணம். நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே விலைவாசியை கட்டுப்படுத்த முடியும். தக்காளி, வெங்காயம், இஞ்சி என காய்கறிகள் பருப்பு வகைகள் என அனைத்து விலைகளும் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஏழை எளிய மக்களின் ஊதியம் உயரவில்லை. அவர்கள் நிலையும் உயரவில்லை. திறமையற்ற அரசாங்கமாக இருப்பதால் விலைவாசி உயர்வை இவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்று விலைவாசி உயர்வு ஏற்படும் சமயங்களில் அரசே நேரடியாக சென்று கொள்முதல் செய்து சந்தைக்கு கொடுத்து விலைவாசியை கட்டுப்படுத்தினோம். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லையே தவிர அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி கூட போடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததன் மூலம் மக்கள் படுவது துன்பம். மக்களுக்கு கிடைப்பது வேதனை.




அரசு மருத்துவமனை செயல்படாமல் இருக்கிறது. சளிக்கு சென்றால், நாய் கடி ஊசி போடுகிறார்கள், திமுக ஆட்சியில் கையோடு அரசு மருத்துவமனைக்கு சென்றால் கை இல்லாமல் திரும்பி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் கை இல்லாமல் செல்லும் நபரோ கையோடு திரும்பி வந்தார் .அமலாக்கத்துறை, வருமானவரி துறை சோதனைகளின் மூலம் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரும். நாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதும் இருந்த போதும் எங்களை வாட்டி வதைத்தீர்கள் எதிர்க்கட்சியாக ஆன பிறகும் எங்களை வாட்டி வதைத்தீர்கள். திமுகவின் ஊழல் குறித்தும் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வர துவங்கியுள்ளது என்று தெரிவித்தார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு சண்முகநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்