நெல்லை மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது வண்ணாரப்பேட்டை. இங்கிருந்து மதுரை, சங்கரன்கோவில், ராஜபாளையம் மார்க்கமாக வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன் நிறுத்தப்படும் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக நெல்லை பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியோரின் உடலை ஆய்வு செய்து பார்த்ததில் முதியவரின் பல் மற்றும் முகத்தின் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் முகத்தில் இருந்து இரத்தம் வந்ததோடு கீழேயும் இரத்த தடயங்கள் இருந்துள்ளது.


இதில் சந்தேகம் அடைந்த போலீசார் முதியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்  பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய தொடங்கினர். அதில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. தச்சநல்லூர் பகுதியில் இருந்து நெல்லை வண்ணார்பேட்டை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்றில் இருந்து முதியவரை ஒரு நபர் இறக்கி, கழுத்தில் கை வைத்து தள்ளியவாறு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு வாகனங்களுக்கு பின்னால் நின்று கொண்டு முதியவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெறிக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கொலை என்பதை உறுதி செய்த போலீசார் பேருந்தில் வந்த நபர் யார்? அந்த நபருக்கும் முதியவருக்கும் என்ன தொடர்பு? எங்கிருந்து இந்த முதியவர் அழைத்து வரப்பட்டார்? எதற்கு இங்கு வந்து அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்தார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முதியவரிடமிருந்து அடையாளங்களை காண்பதற்கான எந்த பொருளும் கிடைக்காத நிலையில் போலீசார் வண்ணாரப்பேட்டை - மதுரை சாலையில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிக நடமாட்டம் இருக்கும் பேருந்து நிறுத்தம் ஒன்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை அடித்து கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் நெல்லை மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண