நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது, நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது, இந்த 55 வார்டுகளுக்கும் 491 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது, அதே போல அம்பாசமுத்திரம் நகராட்சி உள்ள 21 வார்டுகளுக்கும் 42 வாக்குச்சாவடியும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் 51 வாக்குச்சாவடியும், களக்காடு நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டு இருந்தது, அதே போல 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 319 வாக்குச்சாவடிகளில் ஆக மொத்தம் 397 வார்டுகளுக்கு 933 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது,
நெல்லை மாநகர பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் பதிவான ஓட்டு இயந்திரங்கள் பாளையங்கோட்டையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நாளை வாக்குகள் எண்ணப்படுகிறது, அதே போல நாங்குநேரி, வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் என மொத்தமாக 5 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, மேலும் 24 மணிநேரமும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர், அதே போல வாக்கு எண்ணும் மையங்கள் முழுவதுமே வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது,
நெல்லையில் மேயர் பதவியை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி இதுவரை 4 பொதுத்தேர்தலையும், 1 இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது, இதில் 3 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் ஆட்சி புரிந்து உள்ளது. 1996 மற்றும் 2001 தேர்தலில் பட்டியலின பெண்களுக்கான தொகுதியாக இருந்தது, அப்போது மக்கள் நேரடியாக மேயரை தேர்ந்தெடுத்தனர், அதன் பின்னர் பொது ஆண் தொகுதியாக மாற்றப்பட்டு மறைமுக மேயர் தேர்தல் கொண்டு வரப்பட்டது,
நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை யாதவர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பதால் அந்த அடிப்படையில் தான் வாய்ப்புகளும் வழங்கப்படும், பொது ஆண் வார்டாக மாறிய பின்னர் அவர்களுக்கே வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த தேர்தலில் பொது வார்டாக மாற்றப்பட்டு உள்ளது, பொது என்பதால் பிள்ளைமார் மற்றும் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த முறையும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுங்கட்சி என்பதால் திமுகவே இந்த ஆண்டு நெல்லை மாநகர மேயர் பதவியை கைப்பற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களுக்கே மேயர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது,