தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து ஒரு கோடி மதிப்புள்ள போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 7 பேரை நடுக்கடலில் மறித்து கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ மெத்தம் பேட்டமைன் என்ற போதைப் பொருளையும் போலீசார் பறிமுதல் செய்யதுள்ளனர். இந்த கடத்தல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.




தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக இலங்கைக்கு  மஞ்சள், வெங்காய விதை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வந்தது. இதனால் உளவுப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர். அதே நேரத்தில் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையினர், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரும் தூத்துக்குடி கடலோர பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்பகுதியை கடத்தல் கும்பல் தேர்ந்தெடுத்து, அங்கிருந்து இலங்கைக்கு பொருட்களை கடத்துவதற்கு திட்டமிட்டது. இருப்பினும் வேம்பார் கடற்பகுதியில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே 2 முறை சிக்கி இருந்தனர். 



இதற்கிடையே வேம்பார் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு மெத்தம்பேட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, எஸ்ஐக்கள் வேல்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை முதல் வேம்பார் கடற்கரை பகுதியில் ஒரு படகுடன் முகாமிட்டனர். அப்போது கடற்கரையில் இருந்து மற்றொரு படகில் ஒரு பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு பவுடர் நிரப்பப்பட்ட 5 மூட்டைகள் ஏற்றப்பட்டதை கியூ பிரிவு போலீசார் பார்த்தனர்.


அதற்குள் அந்த படகு கடலுக்குள் இலங்கை நோக்கி புறப்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்டு கடத்தல் கும்பல் கண்ணில் படாதவாறு சுமார் 500 மீட்டர் தூரத்தில் தாங்கள் நிறுத்தியிருந்த படகில் கியூ பிரிவு போலீசார் புறப்பட்டனர். போலீசை கவனிக்காத கடத்தல் கும்பல் மிதமான வேகத்தில் படகை செலுத்திய நிலையில் நடுக்கடலில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். படகும், அதில் இருந்த ஒரு கிலோ எடை கொண்ட 10 மூட்டை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.




விசாரணையில் படகில் இருந்த 7 பேர் விளாத்திகுளம் கீழ வைப்பாறைச் சேர்ந்த சிலுவை, வினிஸ்டன், கபிலன், சுபாஷ் , அஸ்வின், கிங்பன், சிப்பிகுளம், வடக்கு தெருவைச் சேர்ந்த  சைமன்  என்பது தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்தவரும், சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவருமான கீழ வைப்பாறைச் சேர்ந்த இருதயவாசு என்பவரை தூத்துக்குடியில் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போதைப் பொருள் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் ஆகும். படகில் மொத்தம் 10 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் இருந்தது. இதன் இந்திய மதிப்பு ஒரு கிலோவுக்கு 10 லட்சம் வீதம், 10 கிலோவுக்கு 1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.




பாகிஸ்தானில் இருந்து கோவா கொண்டு வரப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.