திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில், சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்து வருகிறது. நேற்று (டிசம்பர் 17) அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலும் இருந்து பேரிடர் மீட்பு படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
இப்படியான நிலையில் வெள்ளத்திலும் இளைஞர்கள் சிலர் நீச்சல் அடித்தும், வெள்ள நீர் ஓடும் நிலையில் கடைகளில் உணவு தயாரிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதேசமயம் வெள்ளத்தில் நிகழ்ச்சி நடைபெறும் வீடியோவும் ட்ரெண்டாகியுள்ளது. ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல ரயில்கள் நடுவழியில் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, இன்று சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்தும் முடங்கி விட்டதால் வெளியிடங்களுக்கு சென்ற மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.