நெல்லை பாளையங்கோட்டையில்  மத்திய சிறைச்சாலையில் உள்ளது. இங்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த நிலையில் சிறைச்சாலையில் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமுதாய ரீதியாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுவதும், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கைதி காயம் அடைந்து திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறைத்துறை டிஐஜி பழனி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தினார். 


இந்த நிலையில் நேற்று உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் போது கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்ற கைதிக்கும் சக கைதியான முக்கூடல் அரியநாயகிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், ராஜகோபால், தூத்துக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற கைதிகளுக்கும் இடையே உணவு வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது யார் முதலில் வாங்குவது என்ற அடிப்படையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனை அடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் சிறை வார்டன் உடனடியாக உணவருந்தும் கூடத்திற்கு சென்று கைதிகளை விலக்கி விட்டு சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நெல்லை பாளையங்கோட்டை சிறைத்துறை கண்காணிப்பாளர் முனியாண்டி உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அந்த அடிப்படையில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கைதிகள் 4 பேரும் சிறைச்சாலை மருத்துவமனையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கைதிகள் பேரின்பராஜ், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் ராஜகோபால் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கைதிகளுக்குள் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முத்துமனோ என்ற இளைஞர் சிறையில் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல  தூத்துக்குடியில் 2019 ஆம் ஆண்டு ராம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான விசாரணை கைதிகள் மருதுவேல், பாலசுப்பிரமணியன், சுந்தர மூர்த்தி, ஆகியோர் ஒன்றாக பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த பிப் மாதம் காலை மூன்று பேருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் பாலசுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு மருதவேல் கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால் நெஞ்சுப் பகுதியில்  காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போதும் கைதிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளை மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்படும் மோதலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.