நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை என்ற இரண்டு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இதில் பயிற்சி மருத்துவர்களும் முதுநிலை மருத்துவ மாணவர்களும், இளநிலை மருத்துவ மாணவர்களும் என சுமார் 650-க்கும் மேற்பட்டோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி இருந்து பயின்று வருகின்றனர்..  மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தனித்தனியாக விடுதிகள் என்பது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக உருவெடுத்ததுள்ளது. குறிப்பாக நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினாக பிரிந்து மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை விடுதி துணை கண்காணிப்பாளர்  கண்ணன் பாபு தட்டிக்கேட்ட நிலையில் அவரது கார் கண்ணாடிகளையும் மாணவர்கள் உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.




இந்த புகார் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி ராகிங் கமிட்டி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் ராக்கிங் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் டீன் ரேவதி பாலன் தலைமையிலான குழு நேற்று மாணவர்களை அழைத்து நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களும் இந்த விசாரணையில் ஆஜராகி  நடந்ததை தெரிவித்தனர். அதன்படி மோதலில் ஈடுபட்ட நான்காம் ஆண்டு மாணவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விடுதி வாசலில் நிறுத்தி இருந்த விடுதி துணைக்காப்பாளர் டாக்டர் கண்ணன் பாபுவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியது யார் என்று தெரியவில்லை என்றும், இது தொடர்பாக மருத்துவர் கண்ணன் பாபு காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்ட நிலையில் அது மோதலாக வெடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.