மணிமுத்தாறு ஏர்மாள்புரம் பகுதிகளில் சுற்றி திரிந்த கரடிகள்


நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மிளா உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை  அவ்வப்போது மலையில் இருந்து இறங்கி அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு, கீழ ஏர்மாள்புரம், செட்டிமேடு, திருப்பதியாபுரம், வேம்பையாபுரம்,  டாணா, அனவன் குடியிருப்பு உள்ளிட்ட  கிராமங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணிமுத்தாறு அருகே ஏர்மாள்புரம் மெயின்ரோடு வழியாக ஒற்றைக்கரடி ஒன்று  அம்மன் கோவில் தெரு, மருத்துவர் வீடு  என பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுற்றித் திரிந்துள்ளது.  மேலும் கரடி அந்த பகுதிகளில் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் எதுவும் அச்சத்தில் உள்ள  நிலையில் கரடியை கூண்டு வைத்து பிடிக்க  அப்பகுதிமக்கள் வனத்துறைக்கு  கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக இரண்டு முறை மணிமுத்தாறு மெயின் சாலையில் பட்டப்பகலில் சுற்றி திரிந்த கரடி அங்கிருந்த மரத்தில் தஞ்சமடைந்த நிலையில் இரண்டு முறையும் இரவு நேரத்தில் கீழே இறங்கி சென்றது.


சிறுத்தையை தொடர்ந்து கரடி அச்சத்தில் அனவன்குடியிருப்பு மக்கள்:


இதுஒருபுறமிருக்க நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு மிக அருகே மலையடிவாரத்தில் அனவன் குடியிருப்பு கிராமம் அமைந்துள்ளது. மலையடிவாரம் என்பதால் இங்கும் சிறுத்தைகள், கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கு அடுத்தடுத்து இரண்டு சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது அங்கு கரடி நடமாட்டமும் காணப்படுகிறது. குறிப்பாக அனவன்குடியிருப்பு பகுதியில் கடந்த 4  நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அங்குள்ள பாறைகளுக்கு அருகில் கோயிலில் கரடி உலா வந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் மேலும் அச்சமடைந்துள்ள நிலையில் அனவன்குடியிருப்பிற்கு அருகே இருக்கும் டாணா பகுதியிலும் தற்போது கரடி நடமாட்டம் காணப்பட்டுள்ளது.


டாணா பகுதியில் சாதாரணமாக சுற்றி திரியும் கரடி:


குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டாணா காளிபார்விளை தெருவில் இரவில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் கரடி அப்பகுதியில் செல்லும் போது அங்கு தெருக்களில் இருந்த மக்கள் கரடியை பார்த்து கரடி கரடி என்று கூறி உள்ளே செல்வதும், ஒரு  நபர் வீட்டிற்குள் இருந்தே சத்தமிட்டு அதனை விரட்டுவதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது. மேலும் கரடி கடந்து சென்ற ஒரு சில  நிமிடங்களில் அப்பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி செல்வதும் அதில் பதிவாகியுள்ளது.  இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே மிகுந்த பயமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கிராமங்களில் கரடிகள் தெருக்களில் நாய்கள் செல்வது போது சர்வ சாதாரணமாக செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன் வனத்துறையினர் கரடி நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட வேண்டுமென சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.