நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தன்குழியை சேர்ந்தவர் சகாயம், இவரது மகன் அஜித் (34). மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில்  நேற்று மாலை அஜித் கூத்தன்குழியில்  உள்ள பாத்திமா நகர் மிக்கேல் ஆண்டவர் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு அந்த கும்பல் ஒன்று அஜித்திடம் பேசியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படவே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது.  அதில் ரத்த வெள்ளத்தில் அஜித் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அஜித்தை குத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு வந்த குடும்பத்தினர் அஜித்தின் உடலை பார்த்து கதறி அழுதனர்.


தொடர்ந்து இது குறித்து கூடங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு அங்குள்ள பாத்திமா நகர் மிக்கேல் ஆண்டவர் கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்தது சம்பந்தமாக  முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று  காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் உயிரிழந்த அஜித் மீது ஏற்கனவே மணல் கடத்தல் வழக்கு, திருட்டு வழக்கு என பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், இதனால் அஜித்தை ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இச்சூழலில் அஜித் கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தினால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கூடங்குளம் அருகே மீனவர் ஒருவர் மர்ம கும்பால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா விசாரித்து வருகின்றனர்.