நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சொத்து பிரச்சினை காரணமாக ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதகுளத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு, ( வயது 35 ) . இவர் தனது குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினை காரணமாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதற்கான சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர், திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து மீட்டனர். தொடர்ந்து அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற சங்கரசுப்புவை மீட்க சென்ற ஆட்சியர் அலுவலக வாசலில் பணியாற்றும் உதவி காவல் ஆய்வாளர் அப்துல் ஹமீதுக்கும் கையில் லேசான தீ காயம் ஏற்பட்டுள்ளது.
உதவி மையம்
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)