தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது கடந்த  சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாளை மறுநாள் முதல் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழையானது பெய்தது. இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையானது கொட்டி தீர்த்தது. இதில் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 4 அடி அளவிற்கு மழை நீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்று மழை நீர் தேங்கி நின்ற பாலத்தை கடக்கும் முயன்றது. ஆனால் பாலத்தின் நடுப்பகுதியில் இடுப்பளவிற்கு தேங்கி இருந்த தண்ணீரில் சிக்கி பேருந்து பழுதானதால் பயணிகள் தவித்தனர். பேருந்துக்குள் தண்ணீர் சூழ்ந்த நிலையில் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் பேருந்தில் இருந்த பொதுமக்களை தோலில் தூக்கி பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு விட்டனர்.  இதற்கிடையில் பேருந்து தண்ணீரில் சிக்குவதற்கு முன்பு அங்கிருந்த இருவர் பேருந்து ஓட்டுநரை எச்சரிக்கின்றனர்.  இந்த பாலம் வழியாக போக வேண்டாம், நான்கு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்று பேருந்து ஓட்டுநரை எச்சரித்தனர். ஆனால் அலட்சியத்தோடு ஓட்டுநர் பேருந்தை அதே வழியில் இயக்கியதால் மழைநீரில் பேருந்து செல்ல முடியாமல் சிக்கியது. இதனால் தான் பயணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டது என  சமூக வலைதலங்களில் வெளியான வீடியோ மூலம் தெரிய வந்தது. 


இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக நெல்லை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பேருந்தை ஓட்டியது நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மாவட்டம் குளச்சல் பணிமனையைச் சேர்ந்த சசிகுமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களின் எச்சரிக்கையை மீறி அலட்சியத்தோடு பேருந்தை ஓட்டி பயணிகளை தண்ணீரில் சிக்க வைத்த ஓட்டுனர் சசிக்குமாரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.