நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பாணான்குளம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீசார் தாழைகுளம் விலக்கு அருகே இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக அப்பகுதி வழியாக வந்த பல்வேறு வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அப்பொழுது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் வந்தவர்களிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதோடு வாகனம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். 


LIVE | Kerala Lottery Result Today (06.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (06.08.2024): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-427 செவ்வாய் டிரா அவுட் - முதல் பரிசு 75 லட்சம்


சோதனையில் வாகனத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் தாள் கொண்ட பணம் இருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அந்த பணத்தை சோதனை செய்த போது அது அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பதும் தெரிய வந்துள்ளது. கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தில் வந்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கள்ள நோட்டுகளுடன் வந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாண்டிய நகர் 5 வது தெருவை சார்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த விஷ்ணு சங்கர், அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் ஆகிய  மூவர் என தெரிய வந்தது. தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து சென்று இது தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதோடு பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு 60 லட்ச ரூபாய் எனவும் தெரிய வந்துள்ளது. 


 




மேலும் கள்ள நோட்டுகளுடன் சேர்த்து அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டுகள் தயாரிக்கும் சில உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் கள்ள நோட்டுகளை எங்கு வைத்து அச்சடித்தனர்? வெளியில் புழக்கத்தில் விட்டனரா? அல்லது அச்சடித்த நோட்டுகளை எங்கு கொண்டு செல்கின்றனர்? இதில் மூவரை தவிர வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 60 லட்ச ரூபாய் மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகளை அச்சடித்து வாகனத்தில் கொண்டு சென்ற மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.