நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. குறிப்பாக பாளையங்கோட்டை பகுதியில் 13 வார்டுகள் உள்ள நிலையில் பாளையங்கோட்டை பகுதிக்கு திருமலை கொழுந்துபுரம், மணப்படை வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேலும் மாநகராட்சி முழுவதும் தண்ணீர் வழங்கும் வகையில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலும் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக தெரிய வருகிறது மின்சாரம் அடிக்கடி தடை படுவதாக கூறப்படும் நிலையில் ஜெனரேட்டர்கள் இருந்தும் நீரேற்று நிலையங்களில் ஜெனரேட்டரை பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


நீரேற்று நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில்  நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையிலான குழுவினர் பாளையங்கோட்டை எஸ்பி அலுவலகம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக   நீடித்த போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் எந்த அதிகாரியும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர். தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வஹாப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


இதுகுறித்து சங்கரபாண்டியன் கூறும் பொழுது,  நெல்லை  மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதிகளுக்கு மணப்படை வீடு நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக மாதம் ஒருமுறை மோட்டார்  பழுதாகிவிட்டு, மின்சாரம் இல்லை என கூறி அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க இயலாத சூழல் உள்ளது.  தமிழக முதல்வர் இதற்காக 150 கோடி ஒதுக்கி குடி நீர் பிரச்சினையை போக்க  ஆணையிட்டுள்ளார். ஆனால் தமிழக அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் நெல்லை  மாநகராட்சியில் பணியாற்றி வருகின்றனர். எனவே முதல்வர்  நெல்லை மாநகராட்சி அதிகாரிகளை கவனத்தில் எடுத்து  செயல்படுத்த வேண்டும் என்றும்  கோடையை சமாளிக்க முடியாமல் திணறும் மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உள்ளிட்டோர்  நீரேற்று நிலைய படிக்கட்டுகளில் அமர்ந்து சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.