நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகா வெங்கட்ராயபுரம் பகுதியில் மரியா கிரேஸ் ரூரல் எசுகேசன் சொசைட்டி நிறுவனம் மூலம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, கடந்த 1990 ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வி கற்றல் திறனை மேம்படுத்தவும் இடைநிற்றல் குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யவும் நடுநிலைப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு 2002 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 380க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்துள்ளனர். வெங்கட்ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1990களில் பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவைகள் இல்லாத நேரத்திலும் இந்த பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வந்துள்ளனர்.




ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசுப்பள்ளியை இந்நிறுவனம் வந்ததால் அப்போது மூடப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆண்டு தேர்வுகள் நிறைவு பெறும் தருவாயில் பள்ளியில் போதுமான நிதி இல்லை எனக்கூறி அடுத்த ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என பள்ளி நிர்வாகத்தின் மூலம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் பேசி பார்த்தோம்.  நடத்த முடியாது என்று கூறுகின்றனர். ஊர் மக்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி செயல்படுவதற்கு தங்களால் இயன்ற நிதியை தருகிறோம் என தெரிவித்த நிலையிலும் பள்ளி செயல்படாது என அறிவித்துள்ளனர்.  வருவாய் இல்லாதவர்கள் அந்த பள்ளியை நம்பி தான் உள்ளனர். நடுநிலை பள்ளியாக இருந்த மரியா கிரேஸ் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது பள்ளியில் படித்து வரும் நிலையில் ஒன்பது படித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்வது மிகவும் கடினம் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும். 




அரசு இந்த பள்ளியை கையகப்படுத்தி அரசு பள்ளியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  மேலும் வேறு பள்ளிக்கு செல்ல 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 10 டீச்சர் இருந்தாலும் அவர்களுக்கு சம்பளம் கூட தருகிறோம் என்று கூறுகிறோம், ஆனால் அந்த நிலத்தை விற்க வேண்டும் என்ற முடிவில் பள்ளியை மூடப்போவதாக தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் காரணமாக ஆட்சியாளர் அலுவலகம் முன்பிருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை செலுத்தி சென்றுள்ளனர். பள்ளியை மூடப்போவதாக கூறப்பட்டதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.