நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கொம்பையா. இவர்  கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி முத்துப்பேச்சி.  இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் முத்துபேச்சிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து முத்துபேச்சி நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலை அருகே உள்ள தனது தந்தை மாரியப்பன் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். மாரியப்பன் பாளையங்கோட்டையில் இளநீர் கடை நடத்தி வருகிறார்.


இந்த  நிலையில் நேற்று மாலை வெளியே சென்றிருந்த முத்துப்பேச்சி  பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் முத்துப்பேச்சியின் தலை மற்றும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தந்தை வீட்டில் கடந்த ஒரு  வருடமாக வசித்து வரும் முத்துப்பேச்சிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிய வந்ததுள்ளது. மேலும் இதனை தந்தை மாரியப்பன் கண்டித்துள்ளார். ஆனால் தந்தையின் பேச்சை முத்துப்பேச்சி கேட்காமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் தான் வெளியே சென்றிருந்த முத்துப்பேச்சியை அழைத்து வர தந்தை மாரியப்பன்  சென்றுள்ளார். அப்போது வரும் வழியில் மேலப்பாட்டத்ததில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையம் அருகே  உள்ள காட்டுப் பகுதியில் சென்ற போது மாரியப்பன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துப்பேச்சியை வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துபேச்சி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை விரட்டி துரத்தி சென்ற மாரியப்பன் முத்துபேச்சியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் சம்பவ பகுதியில் நின்றிருந்த மாரியப்பனை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.  12 ஆண்டுகளுக்கு பிறகு திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட மகளை தந்தையே தலையை துண்டித்து வெட்டிக்கொலை செய்த சம்பவம்  நெல்லையில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.