நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தினமும் வெளியில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக இவர்கள் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளுக்கு வந்து தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும், அதோடு கல்லூரிகளுக்கும் இங்கு வந்து தான் பேருந்து ஏறி செல்ல வேண்டும். இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் வரும் அரசு பேருந்தில் போதிய இடவசதி இல்லாததால் தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்ல வேண்டியுள்ள சூழல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். 




வேறு வழியின்றி படிக்கட்டுகளில் தங்களது பிள்ளைகளை ஏற்றிவிட்டு செல்லும் பெற்றோர்களும் பிள்ளைகளை பேருந்தில் ஏற்றி விட்டு விட்டு அச்சத்துடனே வீட்டிற்கு செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். தினமும் இது போன்ற சூழலை சந்திக்கும் தங்களது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்த நிலையில் இன்று  வாசல் வரை கூட்டமாக பேருந்து தெற்கு பாப்பாங்குளம் பகுதிக்கு வந்த போது மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாத  சூழல் உருவானது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் அப்பேருந்தை சிறைபிடித்து பேருந்தை மறித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து  கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் இன்று பரபரப்பான சூழல் உருவானது.