நெல்லை ரகுமான் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகமது. இவர் பள்ளிவாசலில் உணவு சமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறார். இவரது மூன்றாவது மகன் அப்துல் ரகுமான் பேட்டை பகுதியில் உள்ள சோபா நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் தனது நண்பர்கள் இருவருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீரின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அப்துல் ரகுமான் இழுத்துச் சென்றதைக் கண்ட உடன் வந்த நண்பர்கள் அவரை பிடிக்கும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவரைப் பிடிக்க முடியாததால் தண்ணீரில் மூழ்கி அப்துல் ரகுமான் மாயமானார். இதனை தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய அப்துல் ரகுமானை தேடி வந்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு ரப்பர் படகு வரவழைக்கப்பட்டு அப்துல் ரகுமானை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தாமிரபரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளும் தாமிரபரணி நதிக்கரையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று இரவு நீண்ட நேரம் வரை தேடியும் அவரை மீட்க முடியாத நிலையில் இரவில் தீயணைப்புத்துறையினர் கரையேறினர். தொடர்ந்து இன்று காலை மீண்டும் மீட்பு பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி முதல் ஆற்றில் மூழ்கிய நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக மாவட்ட அலுவலரின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களில் இருந்தும் மொத்தமாக 50 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக 3 மணி நேர தேடலுக்கு பின் முகைதீன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர தினத்தன்று நெல்லை பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்கு முன் தாமிரபரணி ஆற்றில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க செல்லும் நபர்கள் ஆழம் தெரியாமல் ஆற்றிற்குள் இறங்க கூடாது, நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது, மேலும் வெளி ஊர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆற்றிற்கு குளிக்க வரும் நபர்கள் ஆட்கள் அதிகம் இருக்கும் இடத்தில் குளிக்க வேண்டும், தனியாக ஆற்றிற்குள் வேறு சில இடங்களில் தள்ளி சென்று குளிக்க கூடாது என தீயணைப்புத்துறை சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்தாலும் அதனை பொருட்படுத்தாது பலர் ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் இது போன்று சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது.