நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது காரம்பாடு கிராமம். இங்குள்ள ஓடைக்கரை சுடலைமாடசாமி திருக்கோவில் நேற்று கோவில் கொடை விழா வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரவில் கொடை விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது கிராம மக்கள் குழுமியிருந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த  இரு பிரிவினருக்கு  இடையே  தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 


அப்போது வாய்த்தகராறு முற்றவே அது இருபிரிவினருக்குமிடையே கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒருபிரிவைச் சேர்ந்த இளைஞர் கத்தியால் மற்றொரு பிரிவை சேர்ந்த மூன்று பேரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் இருவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.


மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




இது தொடர்பாக தகவலறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையானவர்களின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கோவில் கொடை விழாவில் பிளக்ஸ் போர்டு வைப்பது, கரகாட்டம், கணியான் கூத்து கலைஞர்களுக்கு பரிசு கொடுப்பது போன்றவற்றில் யார் பெரியவன் என்ற போட்டியில் தகராறு நடந்ததாகவும், கத்திக்குத்தில் உயிரிழந்த மதிராஜா (35), மதியழகன் (40) ஆகிய இருவரும் சகோதர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.


மேலும் படுகாயமடைந்த மகேஷ்வரன் (41) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏற்கனவே இவர்களுக்கும் பிரச்சினையில் ஈடுபட்ட மற்றொரு தரப்பை சேர்ந்த குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என கொலைக்கான உண்மையான காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 




அதோடு இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பருன் (27), ராஜ்குமார் (28), விபின் (27), ஆகியோர் தப்பியோடிய நிலையில் திசையன்விளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இரட்டைகொலை சம்பவம் குறித்து கொலை நடைபெற்ற இடம், மற்றும் கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளிலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதோடு சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


நெல்லை மாவட்ட எஸ் பி சிலம்பரசன் விடுப்பில் இருப்பதால் குமரி மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கோவில் கொடை விழா தகராறில்  நள்ளிரவில் அண்ணன், தம்பி ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் குடும்பத்தினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.