17 வயது சிறுவனை , கும்பல் ஒன்று வீடு புகுந்து ஆயுதங்களால் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன்,  சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது , அந்த வழியாக, அவர் மீது மோதும் நோக்கில் வேகமாக கார் சென்றுள்ளது. இதன் காரணமாக, காரில் சென்றவர்களை கேள்வி கேட்டுள்ளார், அந்த சிறுவன்.

இதையடுத்து, காரில் இருந்தவர்களும், சிறுவனிடம் கோபத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக வந்து, சிறுவனை விலக்கி , அப்பகுதியில் இருந்து அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

சிறுவன் மீது தாக்குதல்:

இந்நிலையில் , அந்த காரில் சென்ற கும்பலானது நேற்றைய தினம் வீடு புகுந்து அரிவாள் மட்டும் பீர் பாட்டிலால் கொடூரமாக  சிறுவனை தாக்கியுள்ளனர்.  மேலும் , வீட்டில் இருந்த பொருட்களையும் தூக்கி எறிந்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதல் மற்றும் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு , அக்கம் பக்கத்தினர்  உடனடியாக வந்து, சிறுவனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வழக்குப் பதிவு:

இந்த விவகாரத்தில்  திருமலை கொழுந்துபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், லட்சுமணன் ,தங்க இசக்கி ஆகிய மூன்று பேரை பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும்,  அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . இது சம்பந்தமாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட சிறுவன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலானது, சாதி ரீதியிலான தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.