”ஆர்வமும் அதன் மீதான நம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு விசயத்திலும் வெற்றிக்கான பாதையை நோக்கி செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் நெல்லையை சேர்ந்த இளம் வயது இளைஞர் ஒருவர்”. யார் அவர்? அவரின் சாதனை என்ன என்பதை பார்க்கலாம்..
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிப் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (24). இவர் டிப்ளமோவில் விவசாய பட்டப்படிப்பை முடித்து விட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக தனது அம்மா பெயரில் தேன் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரது தாய், தந்தை, சகோதரி இருந்து வருகின்றனர்.
இவரது முக்கிய நோக்கமே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், சுய தொழில் மூலம் சாதிக்க வேண்டும் என்பது தான். அதற்காக விவசாய தோட்டத்தில் தேனீ பெட்டிக்களை வைத்து இயற்கை முறையில் விவசாயத்தை கொண்டு வர வேண்டும் என்கிறார். உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் தரமான பழங்கள், காய்கறிகள் என்பது கிடைப்பது இல்லை, ஆனால் தேனீ பெட்டிக்களை விவசாய நிலங்களில் வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பூக்கள் காய்கறிகளாக மாறும். விவசாயம் செழிக்கும். மேலும் இயற்கை விவசாயத்தை 60% தேனிக்களால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் தேனீக்கள் கொட்டும் என்ற பயம் அனைவரின் மனதிலும் வேரூன்றி உள்ளது. ஆனால் தேனீக்கள் அப்படி இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எனது முகம் முழுவதும் தேனீக்களை விட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். குறிப்பாக தேனீக்களை நாம் தொந்தரவு செய்யாதவரை அவைகள் நம்மை ஒன்றும் செய்யாது என்கிறார் அவர்.
தொடர்ந்து நாம் அவரிடம் பேசுகையில், “விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வமே விவசாயம் சார்ந்த தொழிலான தேனீ வளர்ப்பில் ஈடுபட முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இளம் வயதினர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இது போன்ற சுய தொழில் மூலமும் வாழ்வில் முன்னேற முடியும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தேன் என்பது எந்த காலத்திலும் கெட்டுப்போகாத பொருள் என்பதால் அது நமக்கு கூடுதல் நன்மையாக தான் அமைகிறது. தரமான தேன் கிடைப்பதை தான் மக்களும் விரும்புகின்றனர். மக்கள் கேட்கும் அளவிற்கு தற்போது நம்மால் உற்பத்தி செய்ய கொடுக்க முடியவில்லை” என்றார். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து தற்போது சென்னை வரை தனது கிளைகளை விரிவுபடுத்தி விற்பனை செய்து வருகிறார் இசக்கிமுத்து.
அதுமட்டுமின்றி தாங்களே தேனீ பெட்டிக்களை தயார் செய்து பல இடங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். 2500 ரூபாய் கொண்ட ஒரு பெட்டியை தேனீக்களுடன் சேர்த்தே கொடுத்து வருகிறார். அவர் கூறும் பொழுது, தேனீ வளர்ப்பு பெட்டியை தயார் செய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறேன். குறிப்பாக 200 முதல் 300 பெட்டிக்கள் வரை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம் என்றார். இதோடு மட்டுமின்றி பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் பயிற்சி கொடுத்து வருகிறார். மேலும் தான் தேனீ வளர்க்கும் இடத்திலேயே வாரத்திற்கு இரண்டு நாள் இலவசமாக வகுப்பு எடுத்தும் வருகிறார். சுய தொழில் மூலம் மாதத்திற்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்பதை மற்றவர்களுக்கும் உணர்த்தி வருகிறார் இசக்கிமுத்து. ஒவ்வொரு துறையிலும் பணி புரியும் மக்கள் தான் பணிபுரியும் தொழிலுக்கான அடையாளங்களை வாகனத்தில் எழுதிவைத்து கொள்வது போல் தனது வாகனத்திலும் "BEE KEEPER" என்ற அடையாளத்துடன் வலம் வருகிறார் இசக்கிமுத்து. படித்துமுடித்து விட்டு வேலை தேடும் மற்றும் அரசு வேலைக்காக காத்திருக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு இசக்கிமுத்து ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதே உண்மை....!
”சுய தொழிலான தேனீ வளர்ப்பின் மூலம் லாபம் ஈட்டி வருவதோடு மற்றவர்களுக்கும் அதற்கான பாதையை வகுத்துக் கொடுத்து வாழ்ந்து வரும் இவர் உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டியவர்”...