நெல்லை மாவட்டம் பேட்டையில் உள்ளது மதிதா இந்துக் கல்லூரி. இக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கல்லூரி  துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஜன்னல் வழியாக தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் யாரோ ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் மாணவர்களுக்கு தெரிந்து உள்ளது. உடனடியாக அனைவரும் சென்று பார்த்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் பிணமாக தொங்கி கொண்டிருப்பது பின்னர் தான் தெரிய வந்துள்ளது. உடனடியாக அதனை கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேட்டை காவல்துறையினர்  விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தவர் நெல்லை பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்த சுடலைமுத்து (வயது 30) என்பதும், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுடலை முத்துவின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில் சுடலைமுத்துவின் தாயாருக்கு மன நல பாதிப்பு இருந்து வந்ததாகவும், சுடலைமுத்துவிற்கு திருமணம் கால தாமதமான சூழலிலும் அவர் மனமுடைந்து இது போன்ற முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் கல்லூரிக்கு இன்று விடுமுறையும் அளிக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060