திருநெல்வேலி அருகே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள், வரும் 20.03.2025 முதல் 13.04.2025 வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை - திருச்செந்தூர் ரயில் ரத்து:
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு தினமும் மாலை 4:30 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு தினமும் காலை 10:10 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் ரயில் சேவை என்பது, தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள், தங்களது அன்றாட பணிகளுக்காக இந்த ரயில்களில் பயணித்து வருகின்றனர்.
வணிகம், தொழில், வேலை, மருத்துவ சிகிச்சை, உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது மற்றும் குடும்ப நிகழ்ச்சி என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பயணித்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு:
இந்த நிலையில், ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், சிறந்ததாகவும் மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: TN Budget 2025: ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்; சொன்னதை செய்யாமல், சொல்லாததை செய்யும் திமுக அரசு.. விளாசிய அரசு ஊழியர் சங்கம்!