நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பைக்குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜன், இவருக்கு நித்திஷா என்ற 6 வயது மகளும், நித்திஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். நாகராஜனின் இரண்டு குழந்தைகளுக்கும் அவரது அண்ணன் மணிகண்டனின் காரில் வைத்து உணவு கொடுப்பது வழக்கம்.  இதனால் இன்று வழக்கம் போல் இரண்டு குழந்தைள் மற்றும் சுதன் என்பவரின் 3 வயது மகன் கபிசனுடன் சேர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் விளையாட சென்று உள்ளனர். மூன்று பக்க கதவுகளும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ஒரு பக்க கதவு வழியாக உள்ளே சென்று மூவரும் விளையாடி உள்ளனர்.




ஆனால் அந்த கதவும் மூடியதால் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த மூவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. உள்ளே சென்ற வழியாக கதவை திறந்து  வெளியே வர தெரியாமல் மூவரும் மூச்சுத் திணறி உள்ளே மயங்கி விழுந்து உள்ளனர். குழந்தைகள் காருக்குள் சென்றதை யாரும் கவனிக்காத நிலையில் நீண்ட நேரமாகியும் குழந்தைகளை காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது காரின் அருகே சென்று பார்த்த போது மூவரும் காருக்குள் மயங்கிய நிலையில் இருந்து உள்ளனர்.


உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தைகளை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கே குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.. தொடர்ந்து மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.    பழக்கப்பட்ட கார் என்பதால் அதனுள் விளையாட சென்ற குழந்தைகள் வெளியே வரத் தெரியாமல் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சம்பவ இடத்திற்கு வந்த சபாநாயகர் அப்பாவு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூறி வருகிறார். மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த நித்திஷ் நேற்று முன்தினம்தான் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இந்த நிலையில் இன்று இரண்டு குழந்தைகளும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்.