நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 5 பேர் கொண்ட கும்பல்  மது அருந்திவிட்டு இரண்டு இரு சக்கர வாகனங்களில் கையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் மது பாட்டில்களுடன் சுற்றி திரிந்தனர். அப்போது சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் உணவகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயுதங்களுடன் பொதுமக்களை தாக்கியும் மிரட்டியும் சுற்றி வந்தனர். குறிப்பாக வீரவநல்லூர் அருகே உள்ள ரெட்டியார்புரத்தில் உள்ள உணவகத்திற்கு சென்று அவர்கள் அங்குள்ள அரிவாளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி விட்டு உணவு பொட்டலங்களை பறித்து சென்று உள்ளனர். முன்னதாக புதுக்குடி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு சென்று அங்கும் கடை ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி மதுபாட்டிகளை வாங்கி சென்று உள்ளனர்.




இவ்வாறு பல்வேறு இடங்களில் அரிவாளுடன் சுற்றி திரிந்து ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வீரவநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று உள்ளனர்.  அங்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் இருந்த ஊழியர்களை தாக்கி விட்டு தங்களது இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பின் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.  இந்த நிலையில் 5 பேர் கொண்ட பல்வேறு இடங்களில் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியும் தாக்கியும் சென்றது குறித்து வீரவநல்லூர் காவல் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது, இதனையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டதோடு 5 பேர் கொண்ட மர்மநபர்கள் யார் என விசாரணை நடத்தினர், மேலும் அவர்கள் வந்து சென்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சிகளை கைப்பற்றினர்.






— Revathi (@RevathiM92) June 3, 2022




குறிப்பாக பெட்ரோல் பங்கிற்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கையில் மதுபாட்டில்கள் மற்றும் அரிவாளுடன் வந்து பெட்ரோல் பங்க் ஊழியரை காலால் எட்டி உதைத்தும், அரிவாளை காட்டியும் பெட்ரோல் நிரப்பி விட்டு அதற்கான தொகையை கொடுத்து மீதித்தொகையை பெற்று செல்கின்றனர். மது போதையில் ரகளை செய்த  நபர்கள் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை செய்த நிலையில் தற்போது ஒருவரை கைது செய்து உள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர், இச்சுழலில் பொது இடங்களில் ரவுடித்தனம் செய்த  நபர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள் அதிகமாக கூடும் பஜார் பகுதிகளில் முகமூடி அணிந்த நபர்கள் பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.