தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் உப்பு உற்பத்திக்கான பணிகளை உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே தொடங்கிய போதிலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம்  உள்ளது.




இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. மழை பெய்யாத காரணத்தால் உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த டிசம்பர் மாதத்திலேயே உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கினர். மழைநீர் அதிகளவில் தேங்காததால் உப்பளங்களில் பாதிப்புகள் இல்லை. எனவே, உப்பளங்களை சீரமைக்கும் பணிகளும் பெரிதாக தேவைப்படவில்லை.




நடப்பு ஆண்டில் முன்கூட்டியே உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கியதால் ஜனவரி மாதம் கடைசியில் உப்பு உற்பத்தி தொடங்கும் நிலை ஏற்பட்டது. ஒருசில உப்பளங்களில் உப்பு வாறும் பணிகள் கூட தொடங்கின. இந்த நிலையில் ஜனவரி மாத கடைசி மற்றும் இந்த மாத தொடக்கத்தில் ஒருசில நாட்கள் பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி தடைப்பட்டது. லேசான மழை தான் என்ற போதிலும் உப்பு உற்பத்தி தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் தனபாலன் கூறும்போது, “கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் உப்பு உற்பத்திக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கினோம். வழக்கமாக ஜனவரியில் தொடங்கும் பணிகளை இந்த ஆண்டு டிசம்பரிலேயே தொடங்கிவிட்டோம். எனவே, முன்கூட்டியே உப்பு உற்பத்தியும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் உற்பத்தி தடைபட்டுள்ளது. உப்பளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் புதிய உப்பு உற்பத்தியாக இன்னும் 10 நாட்கள் வரை ஆகும்.




கடந்த ஆண்டு மாவட்டத்தில் சுமார் 72 சதவீதம் அளவுக்கு, அதாவது 18 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது. இதில் சுமார் 4 லட்சம் டன் அளவுக்கு இருப்பு உள்ளது. இது மார்ச் மாதம் தொடக்கம் வரை போதுமானதாக இருக்கும். அதற்குள் புதிய உப்பு உற்பத்தியாகி வந்துவிடும். உப்பு விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டை போலவே தற்போதும் ஒரு டன் ரூ.2000 முதல் ரூ.3000 வரை விலை போகிறது. இந்த ஆண்டு இயற்கை ஒத்துழைத்து, பருவநிலை சாதகமாக இருந்தால் 70 சதவீதத்துக்கு மேல் உப்பு உற்பத்தி இருக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். அதே நேரத்தில் இயற்கை மற்றும் பருவநிலையை தற்போது கணிக்க முடியாது” என்றார்