அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிடன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்டு ஆய்வறிக்கை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பங்குச்சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களில் சுமார் 8 லட்சம் கோடி வரை இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் அதானி குடும்பங்களில் எல்ஐசி பொதுத்துறை நிறுவனமும், SBI வங்கியும் பல கோடி அளவிற்கு முதலீடுகள் செய்துள்ளது அவற்றிலும் தற்போது இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.




குழுமங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அதில் செய்துள்ள முதலீடுகளால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில்  நெல்லை பாளையங்கோட்டையில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதானி குழுமத்தால் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சித்தரிக்கும் வகையில் அதானி முகமூடி அணிந்து ஒருவருக்கு மொட்டை அடித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம்  செபியும் அதானி குழும முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்  தனுஷ்கோடி ஆதித்தன், ராஜேஷ் முருகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கிருஷ்ணாபுரத்தில் நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளருமான ரூபி மனோகரன்  தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம்  செபியும் அதானி குழும முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி முழக்கங்களை எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் விவேக் முருகன், அழகியநம்பி, ராஜா நாராயணன், காமராஜ், ராஜ கோபால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட  ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.