தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி பல்வேறு தரப்பை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்த மகளிர் குழுவினர் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 43 பேரை போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியினர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மகளிர் குழுவினர், கிராம மக்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரவுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ஏஎஸ்பி சந்தீஸ் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மக்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.




இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், அதன் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


தொடர்ந்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் சுமார் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். சிலர் ஸ்டெர்லைட் ஆலை மீது வீண் வதந்திகளை பரப்பி ஆலையை மூட செய்துள்ளனர். தற்போது அவைகளில் உண்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொழில் வளர்ச்சியை பெருக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிலர் வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆலை மூடப்பட்டுள்ளதால் மக்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். தொழில் வளர்ச்சி பாதுக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், கிராம மக்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை போலீஸார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தடுத்து நிறுத்தினர். ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க செல்ல முயன்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர். 39 பெண்கள் உள்ளிட்ட 43 பேரை கைது செய்த போலீஸார், அவர்களை மடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மனு அளிக்க வந்தவர்களை காவல் துறையினர் திடீரென கைது செய்த சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வரை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்போம் என கைது செய்யப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண