தூத்துக்குடியில் ரூ.1000 கோடி முதலீட்டில், 1156 ஏக்கரில் நாட்டிலேயே முதலாவது சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 07.03.2022 அன்று அடிக்கல் நாட்டினார். சிப்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் இந்த பூங்காவில், மர அறவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது. பர்னிச்சர் உற்பத்தி தொடங்கி, பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரையிலான அனைத்து நிறுவனங்களும் இந்த பூங்காவில் இடம் பெறும். மேலும் பர்னிச்சர் தொழில் சார்ந்த உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பயிற்சிக் கூடம், கூட்ட அரங்குகள் போன்ற அனைத்து வசதிகளும் இந்த பூங்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.





இந்த பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலேயே இங்கு தொழில் தொடங்க 8 நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 2 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டாகியும் எந்த நிறுவனமும் இன்னும் பணிகளை தொடங்கவில்லை.




இந்நிலையில் பர்னிச்சர் பூங்காவில் காங்கிரீட் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. இந்த பணிகளை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைவாக முடிக்குமாறு சிப்காட் அதிகாரிகளுக்கு கனிமொழி எம்பி அறிவுறுத்தினார்.




இதுகுறித்து சிப்காட் அதிகாரிகள் கூறும்போது, ‘சர்வதேச பர்னிச்சர் பூங்காவில் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை சிப்காட் நிதியில் இருந்து செய்து வருகிறோம். பல்வேறு அனுமதி, ஒப்புதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால் தாமதம். தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடித்துவிடுவோம். மேலும், துணை மின் நிலையம் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற பணிகளும் மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளன.




இரண்டு நிறுவனங்கள் பணிகளை தொடங்க தயாராக உள்ளன. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிந்ததும் அந்தநிறுவனங்கள் தங்கள் பணிகளை தொடங்கும். தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் படிப்படியாக பணிகளை தொடங்குவார்கள். பல நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் தெரிவித்து வருகின்றன. எனவே, வரும் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு பணிகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.