தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(45). லாரி டிரைவரான  இவர் காய்கறி லோடு ஏற்றி செல்லும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.  வெவ்வேறு சமூகத்தை  சேர்ந்தவர்களான சுமதியை, கண்ணன் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கண்ணனுக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது, இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கண்ணன் வேலைக்கு சென்ற பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் சுமதி பீடி சுற்றி தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக மூத்த மகள் கல்லூரி 2 ஆம் ஆண்டிலேயே தனது படிப்பை பாதியில் விட்டு விட்டு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றதாக தெரிகிறது. இரண்டாவது மகள் மட்டும் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 




சுமதி காலை மற்றும் மாலை நேரத்தில் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலையும் வழக்கம் போல் சாமி கும்பிட சென்றுள்ளார். அங்கு அவரது கணவர் கண்ணனும் வந்துள்ளார். அப்போது கோவிலுக்குள்ளேயே சுமதிக்கும், கண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமான வாக்குவாதம் முற்றவே கோவிலினுள் கிடந்த சாமியை வைக்கும் ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார் கணவர். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மனைவி சுமதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்து கிடந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலையை செய்து விட்டு தப்பியோடிய கண்ணனை தேடி பிடித்து கைது செய்தனர். 


தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது, குறிப்பாக கண்ணனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட மனைவி சுமதி அதனை கைவிடுமாறு கண்டித்து உள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று கோவிலில் வைத்தும் இதே பிரச்னையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கண்ணன் மனைவியை கோவிலுக்குள் கிடந்த கம்பியை எடுத்து தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது. கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கண்டித்த மனைவியை கோவிலுக்குள்ளேயே கணவன் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.