தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துறையின் ரோந்து பணிக்கு தமிழக அரசால் ரூ.65 லட்சம் மதிப்புள்ள 7 கார்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ரோந்து வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.




தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கலந்து கொண்டு ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு இந்த ரோந்து வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் கூறும் போது, “குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்காக இந்த வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குற்றங்கள் நடந்தால் விரைவாக செல்வதற்கும் வசதியாக இருக்கும். அரசு வழங்கி உள்ள இந்த வாகனங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இந்த வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாநகரில் போலீஸ் நிலையங்களை அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.




மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 38 எதிரிகள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 எதிரிகள் உட்பட 238 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 149 வழக்குகள் பதிவு செய்து 256 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய் மற்றும் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 224 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.




இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 1060 வழக்குகள் பதிவு செய்து 1132 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 9034 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 67 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3493 வழக்குகள் பதிவு செய்து 3534 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 7730 லிட்டர் மதுபானம் மற்றும் 86 போதை மாத்திரைகள் 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டு உள்ளது..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண