வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த ஆலையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மாசு பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் பரவுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தநிலையில், தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேர் சில நாட்கள் கழித்து இறந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது.
இதையெடுத்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி சீல் வைத்தது. இதற்கிடையே, வேலைவாய்ப்பு காரணத்துக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினும், ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என ஒரு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் குறைத்தீர்க்கும் தினமான திங்கள்கிழமைதோறும் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்கள், ஆலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் மீனவ மக்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது, துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தங்கம், நிர்மல், ஜோயல், செல்வம், சற்குணராஜ், ஜோஸ் ஆனந்த், கிளிண்டன், மோகன், அக்சயா உள்ளிட்ட 16 பேர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தங்களது மனுவில் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து அவர்களில் தங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலை திறக்க வேண்டும் என துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 16 பேர் மனு அளிக்க வந்தோம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு இல்லாமல் முடங்கி உள்ளோம். மேலும், ஆலையை திறந்தால் வேலை வாய்ப்பு தருவதாக ஆலை தரப்பில் தெரிவித்தனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த மோகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். எந்தவித பாதிப்பும் இல்லை. கழிவு நீர் கடலில் கலப்பதாக ஆலை எதிர்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு தகுந்த ஆதராம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து படிப்பு உதவி செய்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் மழை பெய்யும் என கூறுகின்றனர். ஆனால் ஆலை மூடி 4 ஆண்டுகள் ஆகிறது. போதிய மழை இல்லை. எனவே, வதந்திகளை நம்பாமல் ஆலையை திறக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
ராஜாவின்கோவில் பகுதியை சேர்ந்த ராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்பு இல்லை, 15 பேர் இறப்புக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. இதேபோல, காற்று மாசுபாட்டுக்கும் ஆலைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே, இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்” என தெரிவித்தார்.