நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் என்பவரின் மகன் மாயாண்டி (38).  இவர் கடந்த 10 ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த சீவலப்பேரி போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது வரை மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கொலை செய்யப்பட்ட மாயாண்டி


குறிப்பாக அதே பகுதியை சேர்ந்த இரு வேறு சமூகத்தினரிடையே கோவிலை நிர்வகிப்பது குறித்த மோதல் இருந்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவில் பூசாரி சிதம்பரம் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு தொடர்பான சாட்சியங்களுடன் மாயாண்டி நெருங்கி பழகுவது, அவர்களை  நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வது என இருந்துள்ளார். இதன் காரணமாகவே மாயாண்டியையும் தீர்த்து கட்ட முடிவு செய்த அவர்கள் திட்டமிட்டு அவரை கொலை செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணையில் முதற்கட்டமாக சீவலப்பேரியை சேர்ந்த வலதி என்ற ஆறுமுகம் (18), வல்ல நாட்டை சேர்ந்த தம்பான்(18), பல்லிக்கோட்டையை சேர்ந்த மாடசாமி(24), சுபாஷ்(27), வசவப்பபுரத்தை சேர்ந்த மதன் என்ற மாயாண்டி(18), இசக்கிபாண்டி(19), வல்லநாட்டை சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன்(19), மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த முத்துராஜ் மற்றும் கொக்கிகுமார் என்ற வெயிலுகுமார் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய சீவலப்பேரியை சேர்ந்த மாசானமுத்து(18), மற்றும் இளஞ்சிறார்கள் 3 பேர் என மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வழக்கில் மொத்தமாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதில் கைது செய்யப்பட்டுள்ள 3 இளஞ்சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்தவரிகளிடையே ஏற்பட்ட இந்த படுகொலை சம்பவத்தால் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் நெல்லையில் பதட்டம் நிலவி வருகிறது...





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண