தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதி கடலில் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ளது புன்னக்காயல் மீனவர் கிராமம். பல்வேறு வரலாற்றுத் தலங்களை கொண்டுள்ள இந்த கிராமத்தில் தான் தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் கிபி 1986 ஆம் ஆண்டு இருந்ததாகவும் அந்த அச்சுக் கூடத்தில் அடியார் வரலாறு என்ற நூல் இயேசு சபையைச் சேர்ந்த ஹென்றி ஹென்றிக்கஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியாரால் அச்சிடப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை அதிகாரி ஆசைத்தம்பி புன்னக்காயல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டார். புன்னக்காயலில் அச்சுக்குடம் இருந்தது தொடர்பான ஆவணங்களை ஊர் நிர்வாகம் சார்பில் ஒரு தலைவர் எடிசன் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.




எழுத்தாளர் நெய்தல் அண்டோ, தன்னிடம் இருந்த இரண்டு பழமையான உலோக ஆட்சிகளை காட்டி விளக்கினார். மரங்கள் நடுவதற்காக தோண்டப்பட்ட இடங்களில் இருந்து யூனியன் வார்டு உறுப்பினர் தாமஸ் பச்சை நிறத்திலான சிறுபொருளை எடுத்து வந்து காட்டினார். அந்த பொருள் 15ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் பயன்பாட்டில் இருந்த செப்பு காசுகளாகவும் கடந்த ஆண்டு கொற்கை அருகே மாரமங்கலத்தில் கிடைத்த சப்பு காசுகளும் இங்கே கிடைத்த செப்பு காசுகளும் ஒன்றாக இருப்பதாக தொல்லியல் துறை அதிகாரி தெரிவித்தார்.




தொடர்ந்து ஊர் நிர்வாகத்தினரும் மக்களும் அந்த பகுதியில் தேடி 16 செப்பு காசுகளை கண்டெடுத்தனர். கிணற்று உரைக்கான் துண்டுகள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் பாத்திரத்தின் துண்டுகளையும் கண்டெடுத்தனர். இவை தொல்லியல் துறை அதிகாரி ஆசைத்தம்பி பதிவு செய்து கொண்டார். அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.




இதுகுறித்து தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் என்ற நூலை எழுதிய நெய்தல் அண்டோ கூறும் போது, புன்னக்காயலில் வாழ்ந்த இயேசு சபை பாதிரியார் ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவர், 1578 ஆம் ஆண்டில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் நூலை கொல்லத்தில் உள்ள அச்சு கூடத்தில் அச்சிட்டு உள்ளார். அதன் ஒரு பகுதி ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ளது. 1579 ஆம் ஆண்டு கிரிசித்தியானி வணக்கம் என்ற நூலை கொச்சி அச்சுக் கூடத்தில் அச்சிட்டு உள்ளார். இதன் ஒரு பிரதி ஆக்ஸ்போர்டு நூலகத்தில் உள்ளது. தொடர்ந்து 1580 ஆம் ஆண்டு கொம்பெசியோனாயரு என்ற நூலை கொச்சி அச்சுக்கூடத்தில் அச்சிட்டு உள்ளார். இதன் ஒரு பிரதி ஆக்ஸ்போர்டு நூலகத்தில் உள்ளது.




இதன் தொடர்ச்சியாக 1586 ஆம் ஆண்டு புன்னக்காயலில் அச்சுக்கூடத்தை அமைத்து அடியார் வரலாறு என்ற நூலை அச்சிட்டு உள்ளார். இதன் ஒரு பிரதி லத்திகன் நூலகத்திலும் மற்றொரு பிரதி கோபன்ஹேகன் அருங்காட்சியகத்திலும் உள்ளது. இதுதான் தமிழகத்தில் உருவான முதல் அச்சுக் கூடமாகும் இங்கு விரிவாக ஆய்வு செய்தால் தமிழர்களின் வாணிகச் சிறப்பும் அச்சுக்களையும் சிறப்பையும் உலகறிய செய்ய பல்வேறு சான்றுகள் கிடைக்கும் என்கிறார்.