நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக சிலை தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த்முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் அவர் நெல்லை சரக சிலை தடுப்பு பிரிவு காவல்துறைக்கு இதுகுறித்து சோதனை நடத்தி கண்டறிய உத்தரவிட்டார். இதனையடுத்து நெல்லை சரக சிலை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீசார் ராஜவல்லிபுரம் சென்று அப்பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரது வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலையில்  அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.


சோதனையில் அவரது வீட்டில் இருந்து  24 சென்டி மீட்டர் உயரம் உள்ள உலோக விநாயகர் சிலை , 43.5 சென்டி மீட்டர் உயரம் உள்ள சுவரில் மாட்டும் உலோக விநாயகர் சிலை, சிலுவையில் அறையப்பட்ட 9.5 சென்டி மீட்டர் அளவுள்ள இயேசுநாதர் சிலை , வடமாநிலத்தில் வழிபடக்கூடிய 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட  தாரா அம்மன் உலோக சிலை ஆகியவை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மேலும் இச்சிலைகள் எந்தவொரு ஆவணம் இன்றி  இருப்பதால் திருட்டு சிலைகளாக இருக்கலாமா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. நடராஜனிடம் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் சிலை தடுப்பு போலீசார் இந்த சிலைகள் எந்த பகுதியை சேர்ந்தது, கடத்தி வரப்பட்டதா ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




தொடர்ந்து கைப்பற்றப்பட்ட 5 சிலைகளையும் டெல்லியில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி இது எந்த காலத்தை சேர்ந்த சிலைகள், சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் சூழலில் இதன் உண்மையான மதிப்பு என்ன என்பது குறித்து அறியவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். நடராஜன் சினிமாத்துறையில் புகைப்பட கலைஞராகவும், நடிகராகவும் உள்ளார் என்பதும், அழகு கலைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லையில் 5 பழங்கால உலக சிலைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண