தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ளது வேதாந்தா குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை. இந்த ஆலை கடந்த 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ம் ஆண்டு உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தியாவின் மொத்த தாமிர தேவையில் 40 சதவீதத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது. இதனை தவிர கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவையும் இங்கே உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தின் மொத்த கந்தக அமிலம் உற்பத்தியில் ஸ்டெர்லைட் நிறுவனம் 95 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தின் மொத்த வருவாயில் 12 சதவீதத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்து வந்தது. இந்த ஆலை மூலம் ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.
தூத்துக்குடி நகரின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வந்த ஸ்டெர்லைட் நிறுவனம், தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் சந்தித்து வந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மூட உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் சில நாட்களிலேயே ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.
தொடர்ந்து 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆலையை மூட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் இம்முறையும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று அடுத்த மாதமே ஆலையை ஸ்டெர்லைட் நிறுவனம் திறந்தது. இந்த முறை ஆலைக்கு ரூ.100 கோடி அபராதத்தை உச்சநீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக 2018-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி ஸ்டெர்லைட் அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கிராம மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தின் 100-வது நாளை முன்னிட்டு 2018 மே 22-ம் தேதி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடத்தப்பட்ட பேரணி பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் கலவரத்தில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 2018 மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அன்றைய தினமே ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. அதற்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இடையில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்திகாக மட்டும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மட்டும் 3 மாதங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழமம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் சுமார் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மேலும், ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆலையை திறக்க கோரும் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என அந்த நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இருப்பினும் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தொடர் முயற்சிகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. தூத்துக்குடி பகுதி மக்களின் ஆதரவை திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து அளித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த 12 பேருக்கு தலா ரூ.2.5 லட்சம் நிதியுதவியை அளித்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் என பலதரப்பட்ட மக்களும் வாரம் தோறும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
இதேபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கைவிடும் எண்ணம் ஏதும் இல்லை. ஆலையை மீண்டும் திறப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வேதாந்தா குழுமம் சார்பில் பிரபலமான ஒரு தமிழ் மற்றும் ஒரு ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆண்டுக்கு 4 லட்சம் டன் திறன் கொண்ட தாமிர உருக்காலை பிரிவு, தாமிர சுத்திகரிப்பு பிரிவு, தாமிர கம்பி உற்பத்தி பிரிவு, 160 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம், கந்தக அமிலம் உற்பத்தி பிரிவு, பாஸ்பாரிக் அமிலம் உற்பத்தி பிரிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஊழியர் குடியிருப்பு என அனைத்தையும் முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை வாங்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தை இ-மெயில் மூலமாக வரும் ஜூலை 4-ம் தேதி மாலை 6 மணி வரை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான இ-மெயில் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளது.
வேதாந்தா குழுமத்தின் இந்த திடீர் முடிவு தூத்துக்குடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த முடிவு தொடர்பாக விளக்கம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை என்பது நாட்டின் சொத்து ஆகும். நாட்டின் மொத்த தாமிர தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து, தாமிர உற்பத்தியில் நாட்டை சுய சார்பு நிலையை நோக்கி அழைத்து செல்வதில் இந்த ஆலை முக்கிய பங்காற்றி வந்தது. இந்நிலையில் நாட்டின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும், அதிகரித்து வரும் நாட்டின் தாமிர தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சொத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்