நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம், இவர் ஏழை எளிய மாணவர்களுக்கு கராத்தே கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இதில் வரும் வருமானத்தை கொண்டு தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்த சூழலில் இளைய மகன் அசாரூதீன் பேட்டை அருகே உள்ள  காமராஜ் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று வந்த நிலையில் 15ம் தேதி அன்று மாணவன் அசாருதீன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். கடைசி 2 தேர்வுகள் இருந்த நிலையில் இந்த விபத்தானது அசாருதீன் மற்றும் அவரது குடும்பத்தை கலங்கச் செய்தது. விபத்தில் சிக்கி காலில் படுகாயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.




மீதம் இரண்டு தேர்வுகள் எழுத வேண்டியிருந்த நிலையில் திடீரெனெ ஏற்பட்ட விபத்தால் நீண்ட நேரம் உட்கார முடியாலும் எழுந்து நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அப்போது குடும்பத்தினர் அசாருதீனின் உடல் நிலையை எண்ணி தேர்வு எழுத முடியவில்லை என்றாலும் பரவாயில்லை என ஆறுதல் கூறி உள்ளனர். ஆனால் மனம் தளராது தேர்வை எழுதியே ஆக வேண்டும், என்னால் முடியும் என தன்னம்பிக்கையுடன் கூறிய நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் ஆம்புலன்சில் ஸ்ட்ரக்சருடன் சென்று 17ம் தேதி நடைபெற்ற தேர்விலும், 20ம் தேதி நடைபெற்ற கடைசி தேர்விலும் ஸ்ட்ரக்சரில் படுத்த படியே அசாருதீன் தேர்வை எழுதினார்.


இதற்கு அப்பள்ளி ஆசிரியர்களும் பெரிதும் உதவி செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் அசாருதீன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என்பதை அறிந்த பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.  விபத்தில் சிக்கிய போதும் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வு என்பதால் அசாரூதின் தேர்வில் கலந்து கொண்டதுடன் கடினமான சூழலில் வெற்றி பெற்றிருப்பது சக மாணவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




இது குறித்து அசாருதீன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, "காலில் அடிபட்டு மிகுந்த வேதனையிலும் எனது தந்தை மற்றும் நண்பர்கள், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் என்னால் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. என்னை போன்ற இளைஞர்களும் வருங்காலத்தில் எந்த நிலையிலும் மனம் தளராமல் கல்வியை நோக்கி முன்னரே வேண்டும், எனக்கு கராத்தே மீது மிகுந்த ஆர்வம் உண்டு, தற்போது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது, இதிலிருந்து மீண்டு வந்து கராத்தேயில் பல விருதுகளை பெறுவேன்" என கூறினார்.




இதனை தொடர்ந்து அசாருதீனின் தந்தை கூறும் போது, எனது மகன் விபத்தில் சிக்கி மிகுந்த கஷ்டத்தை அனுபவித்தான். எழுந்து இருக்கக்கூட முடியாத சூழலில் தேர்வை எப்படியாது எழுதியாக வேண்டும் என்று உறுதியோடு இருந்தான். தேர்வை எழுத அழைத்து சென்ற போது அவனால் எழுத கூட முடியாமல் அழுது விட்டான். இருப்பினும் அந்த வலியை கூட பொருட்படுத்தாமல் 2 தேர்வையும் எழுதி இன்று வெற்றி பெற்று விட்டான். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதே போல் தன்னம்பிக்கையுடன் இருந்தால் ஒவ்வொருவரும் வெற்றி பெற முடியும். தமிழக அரசு கல்விக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதனை வருங்கால மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். போட்டி என்றால் அதனை வேடிக்கை பார்த்தால் இறுதி வரை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். களத்தில் இறங்கி விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என கூறினார்.