தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் அருகே உள்ளது சேரகுளம், விவசாயிகள் நிறைந்த இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 35 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிகென தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் உள்ளனர். இப்பள்ளியின் கட்டிடம் மிகுந்த சேதமானதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்று வருகிறது.
அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஓராண்டு காலமாக தற்காலிக வாடகை வீடு ஒன்றில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த தற்காலிக வாடகை வீடானது முறையான அனுமதி மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இயங்கி வருகிறது. மேலும் அந்த தற்காலிக வாடகை வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அதன் சுவர்களில் விரிசல் விட்டுள்ளது. இடிந்து விழும் தருவாயில் இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது.
மேலும் அந்த வாடகை வீட்டில், மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கழிவறை, விளையாட்டு திடல், முதலுதவி பெட்டி, மின்விசிறி, முறையான குடிநீர் வசதி, காற்றோட்டமான சுற்றுச்சூழல், இவை அனைத்துமே முறையாக இல்லை. மேலும் காலநிலை மாற்றத்தினால் அவ்வப்போது ஏற்படும் கடும் வெயில் மற்றும் கனமழை போன்றவற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வண்ணம் வகுப்பறைகளும் இல்லை.
1 மற்றும் 2 ஆம் வகுப்புகள் ஒரு கட்டிடத்திலும் 3 முதல் 5 வரை ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட கட்டிடத்திலும் நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகென தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் உள்ளனர். 3 முதல் 5 வரை பாடம் நடத்தும் இந்த அறையில் தான் ஒரு இடத்தில் மசாலை அரைப்பதற்கான அம்மிகுழவியும் குடிநீர் தொட்டியும் அமைந்து உள்ளது. குண்டும் குழியுமான தரை, கிழிந்த மறைப்பு என பார்ப்பதற்கு பரிதாபமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
எனவே, புதியகட்டிடம் கட்டும்வரை பள்ளி மாணவர்களுக்கு வேறு ஒரு பாதுகாப்பான மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் உடைய இடத்தில் தற்காலிகமாக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் பள்ளி கழிவறையில் ஏற்பட்ட விபத்தினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . அதேபோல் மேலும் ஒரு சம்பவம் நடந்துவிடகூடாது .
சேதமடைந்த பள்ளி கட்டிடதற்கு பதிலாக புதிதாக பள்ளி அறைகள் கட்டப்பட்டு உள்ளது. கட்டப்பட்டு சில மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் மக்கள் பிரதிநிதிகளின் கையால் திறக்கப்படுவதற்காக காத்திருக்கும் சூழ்நிலை உள்ளதாக கூறும் இப்பகுதி மக்கள், தற்போது காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது இந்த பள்ளியும் பயன்பாட்டிற்கு வந்தால் நல்லது என்கின்றனர் .
எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த விஷயத்தை உடனடியாக நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான ஆவணங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.