35 வயதுடைய திருமணமான பெண் தனது குடும்பத்தினருடன் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் அப்பெண் நோய் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மன நிம்மதிக்காக அருகே உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்திற்கு சென்று அடிக்கடி வழிபாடு செய்து வருவதை தனது வழக்கமாக வைத்துள்ளார். அங்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது மன அழுத்தங்களை பாதிரியாரிடம் கூறி அவ்வப்போது பிரார்த்தனை செய்ய சொல்லி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிரியார் ஜெகன் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பிரார்த்தனை செய்ததோடு நல்ல நட்பாய் பழகி வந்துள்ளார்.


பின் பாதிரியார் ஜெகன் தவறான எண்ணத்தோடு அந்த பெண்ணுக்கு ஆபாசமான முறையில் குறுந்தகவல் அனுப்புவது பாலியல் ரீதியான சீண்டல்களை செய்வது உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இதனால் மேலும் மன வேதனைக்குள்ளான அந்த பெண் இதுகுறித்து குடும்பத்தில் தெரிய வந்தால் தேவையில்லாத  பிரச்சினை வரும் என எண்ணி பிரார்த்தனைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் வீட்டிலும் எந்த தகவலையும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரார்த்தனை கூடத்திற்கு அந்த பெண் வராமல் இருந்த கோபத்தில் பாதிரியார் ஜெகன் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் சென்று தேவையில்லாத தகவல்கள் குறித்து பேசியதாக தெரிகிறது. இது அப்பெண்ணிற்கு தெரியவரவே மனமுடைந்து அந்த பெண் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார்.


இதனைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்ணின் மகன் தனது தாய்க்கு ஏற்பட்ட பிரச்சினை குறித்து அருகில் உள்ள தச்ச நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் ஜெகனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் செய்த தவறுகளை பாதிரியார் ஜெகன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டுதல், ஆபாசமாக பெண்ணிடம் நடந்து கொள்ளுதல், பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடுத்துதல், பெண்ணிற்கு பாலியல் சீண்டல் செய்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மன நிம்மதிக்காக பிரார்த்தனை கூடத்திற்கு வந்த பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து அவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டியதோடு தற்போது பாதிரியார் கம்பி எண்ணி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.