தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசுகையில், “கிராமங்களில் எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் சமூகம் அமைதியான முறையில் இருப்பதற்கும், யாரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தை தொலைத்துவிடாமல் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றுவது இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மாவட்டம் முழுவதும் சாதி அடையாளங்களை நீக்கி தமிழ்நாட்டில் ஜாதி அடையாளங்கள் இல்லாத முதன்மை மாவட்டமாக மாற்றியதற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த சமூகத்தைச் சார்ந்தவர் தவறு செய்தாலும் அவர்மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். ஊர் முக்கியஸ்தர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொண்டு குற்றம் செய்தவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், அது தவறு என்று சுட்டிக்காட்டி அவரை நல்வழிப்படுத்த வேண்டும். அதன் மூலம் உங்கள் கிராம பகுதியில் எந்தவித குற்றமும் நடைபெறாது. முக்கிய திருவிழா மற்றும் பண்டிகை நாட்களின் போது இளைஞர்கள் மது போதையில் செய்யும் சிறு தகராறு மிகப் பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. மேலும் இளைஞர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பி வருகின்றனர். அதற்கு காவல்துறை காவல்துறை கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற செயல்களினால் ஒரு குற்ற வழக்கு பதிவு செய்தால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும், கோபத்தினால் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான்.
இளைஞர்கள் எப்பொழுதும் நேர்மையான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் அரசு வேலைக்கோ, வெளிநாட்டில் நல்ல வேலைக்கோ சென்று சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்களாகிய நீங்கள் இதை உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் பகுதி இளைஞர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களை மேம்படுத்த வேண்டும். மேலும் பழிக்குபழி என்ற எண்ணத்தை கைவிட்டு, ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இரு கிராமங்களில் வசிப்பவர்களுக்கிடையே ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினையை சாதி பிரச்சினையாகவோ, பொதுப்பிரச்சினையாகவோ ஆக்காமல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்து சுமூகமாக தீர்ப்பதற்கு முயல வேண்டும். நம்முடைய சந்ததிகளுக்கு நிம்மதியான மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்கி கொடுப்பது நமது பொறுப்பாகும். அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் மற்றும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 7 தாய் கிராமத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.