நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். இவர் கூலி தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு தங்கத்தாய்(20) என்ற மகள், மகன் உட்பட குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது இவருடன் வேலை செய்யும் மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதல் விவகாரம் தங்கத்தாயின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தங்கத்தாயின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில்  நேற்று காலையும் காதல் விவகாரம் தொடர்பாக தங்கத்தாய் வீட்டில் பிரச்சனை வந்துள்ளது. தொடர்ந்து சண்டை முற்றிய நிலையில் நேற்று இரவு தங்கத்தாயின் சகோதரர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கத்தாயை சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதனால் நிலை குலைந்து தடுமாறி ரத்த வெள்ளத்தில் தங்கத்தாய் கீழே சரிந்துள்ளார். 


மேலும் தங்கத்தாயின் சகோதரரான இளம் சிறார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். முன்னதாக தங்கத்தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது தங்கத்தாய் வீட்டின் முற்றத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.  இதனிடையே தங்கத்தாயின் மற்றொரு சகோதரி உட்பட வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் தங்கத்தாயின் உடலை பார்த்து  கதறி அழுதனர்.  தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தாழையூத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் தங்கத்தாயின் உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து தப்பியோடிய இளம் சிறாரை தேடி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சகோதரி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததாக 17 வயது இளம் சிறாரான சகோதரர் அவரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.