நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட காண்ட்ராக்ட் பணி செய்து வருகிறார். வழக்கம் போல் இரவு பணியை முடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார், அப்போது நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி குளத்தின் அருகே கீழே விழுந்து கிடந்துள்ளார். அவர் கீழே கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த முன்னீர் பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர், அப்போது அங்கிருந்தவர்கள் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, உடலிலிருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவரை மீட்ட காவல்துறையினர் அவர் உயிரிழந்திருந்ததையும், அவர் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததையும் அறிந்தனர். தொடர்ந்து உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சுரேஷ் உயிரிழந்தது தொடர்பான இரு வேறு தகவல்களால் பிராஞ்சேரி பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். சுரேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபாலசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் முகாமிட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சுரேஷ் சந்தேகமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நெல்லையில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.