தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம்  உள்ளது. 



 

ஜனவரி உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் தான் அதிக அளவிலான உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கம். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியவுடன் டிசம்பர் வரை உப்பு உற்பத்தி நடைபெறாது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில்தான் தொடங்கியது. இதனால் உப்பு உற்பத்தியும் அக்டோர் மாத இறுதியில் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்தாலும் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மழை பெய்யவில்லை இதனால் உள்ளபளங்களை தயார் செய்யும் பணிகள் முன்கூட்டியே தொடங்கி நடந்து வருகிறது.

 

 

தூத்துக்குடியில் நவம்பர் மாதம் பெய்த அதிக மழை காரணமாக உப்பளங்களில் வழக்கத்தை விட கூடுதல் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அவைகளை சரி செய்யும் பணியில் உப்பளத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை ஏதும் பெய்யாமல் இதே வானிலை தொடர்ந்தால் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைய 6 வாரங்கள் வரை ஆகும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, மழை பெய்யாமல் இருந்தால் பிப்ரவரி மாதத்தில் உப்பு கிடைக்கும், இப்போதைக்கு 10 சதவீத உப்பு கையிருப்பு உள்ளது. பிப்ரவரியில் உப்பு உற்பத்தி துவங்கிவிடும் என எதிர்பார்ப்பதாகவும் விலையும் போதுமானதாக உள்ளதாலும் கடந்த சில வாரங்களாக மழை இல்லாமல் வெயில் இருப்பதாலும் உப்பளங்களை சீர்படுத்தும் பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

 

சுமார் 70 சதவீத உப்பளங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மழை அதிகம் பெய்ததால் உப்பளங்களில் சேதங்களும் அதிகம் ஏற்பட்டுள்ளன. உப்பள பாத்திகளில் சேர்ந்துள்ள கழிவுகள், மணல்களை அகற்றும் பணிகள், உடைப்பு ஏற்பட்ட கரைகளை சரி செய்யும் பணிகள், சாலைகள், பாதைகளை சீரமைக்கும் பணிகள் போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இனிமேல் மழை ஏதும் பெய்யாமல் இருந்தால்  ஜனவரி கடைசியில் உப்பளங்கள் உற்பத்திக்கு தயாராகி, பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து புது உப்பு கிடைக்கும்.


 

உப்பள பாத்திகளை செம்மைப்படுத்துதல், தேங்கியுள்ள மணல்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுப்பட்டு உள்ள உப்பள தொழிலாளிகளிடம் கேட்டபோது, மழை கால நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். பருவமழையும் முடிந்து வெயிலும் அடிக்க தொடங்கி இருந்தாலும் நிவாரணத்தை அரசுதரும் நம்பிக்கையோடு அடுத்த வேளை சோத்துக்காக வேலையை பார்க்க துவங்கிட்டோம் என்கின்றனர்.