ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணத்தில் செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில், இரவு காவலாளி இல்லாத நிலையில், அங்கிருந்த ஏடிஎம் சேவை மையத்தில் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரத்தை உடைக்க முடியாததால் நல் வாய்ப்பாக வாடிக்கையாளர்கள் எடுப்பதற்காக வைக்கப்படிருந்த லட்சக்கணக்கான  பணம் தப்பியுள்ளது.


வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கிகள் மூலம், ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏ.டி.எம்., மையத்திலும், ஒருமுறை, 25 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைக்கலாம். இவ்வாறு ஏ.டி.எம்., இயந்திரங்களில் வைக்கப்படும், பணத்தை குறிவைத்து, சிலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து, பணத்தை கொள்ளையடிப்பது முடியாத காரியம் என்பதால், பெரும்பாலான ஏ.டி.எம்., கொள்ளை முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. கொள்ளை முயற்சியின் போது, அந்தந்த ஏ.டி.எம்.,களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலாளிகள் கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.  பெரும்பாலான ஏ.டி.எம்., மையங்களில் காவலாளி கூட வைப்பதில்லை என்பதால்  பாதுகாப்பில்லா நிலை தொடர்கிறது.




நேற்று இரவு  எஸ்.பி.பட்டிணம் என்றழைக்கப்படும் சுந்தர பாண்டிய பட்டினத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான   ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்  உடைக்க முயன்ற காட்சியை கண்காணிப்பு கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து கொண்டிருந்த ராமநாதபுரத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை  அதிகாரிகள் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளனர். 


இந்நிலையில் நேற்று இரவு  இயந்திரத்தை உடைக்க முடியாமல் போகவே, மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து எஸ்.பி.பட்டிணம் போலீஸார் வழக்கு பதிந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த  சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில்,   அதில் மர்ம நபர் ஒருவர் முழுக்கை சட்டையும் லுங்கியும் அணிந்து கைக்குட்டையால் கட்டி முகத்தை மறைத்தபடி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சிக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து அந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், ராமநாபுரத்தில் இருந்து சென்ற  தடயவியல் நிபுணரகள் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம்  அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




இது குறித்து அப்பகுதி வணிகர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், இந்த ஏடிஎம்மில் காவலாளி இல்லாததால் இதே போன்று இதற்கு முன்பு இரண்டு முறை இதே ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மேலும், தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 42  காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, எஸ்பி பட்டிணம் காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் இரவுநேர ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபடுவதில்லை எனவும், எனவே தொடர்ந்து இந்த பகுதியில் கொள்ளை  முயற்சி நடந்து வருவதாகவும் வணிகர்களும் பொதுமக்களும் புகார் தெரிவிக்கும் அவர்கள், அதிக வர்த்தக நிறுவனங்களை கொண்டுள்ள இந்த எஸ்.பி பட்டிணம் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு இதுபோன்ற கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.




இது தொடர்பாக போலீசாரிடம் நாம் விசாரித்ததில், வங்கிகள், ஏ.டி.எம்., இந்திரம் அமைக்கும் பணியை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குகின்றன. அதேபோல், பணத்தை, ஏ.டி.எம்.,மில் நிரப்பும் பணியும், தனியார் நிறுவனம் வசமே கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்., இயந்திரம் அமைக்கும் பணி செய்யும் தனியாரும், பணம் நிரப்பும் தனியாரும், ஏ.டி.எம்.,மின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும், தொழில் நுட்பத்தையும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஏடிஎம் தொழில்நுட்பத்திறனை நன்கு அறிந்தவர்களின் உதவியோடு கொள்ளை அடிக்கிறார்கள்.  ஏடிஎம் தொழில் நுட்பத்திறன்  தெரியாதவர்கள் முயற்சி தோல்வி அடைகிறது. எனவே,  எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏடிஎம் மையங்களில் பகல் நேரங்களில் இல்லாவிட்டாலும் இரவு நேரங்களில் கட்டாயம் காவலாளிகள் நியமிக்க வேண்டும் என கூறுகிறார்.