தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், ஆலோசனை குழு தலைவருமான கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத் வரவேற்று பேசினார்.




கூட்டத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணிகள் மற்றும் விமான சேவைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. கூட்டத்தில் ஆலோசனை குழு உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.




பின்னர் கனிமொழி எம்.பி கூறும் போது, "தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. விமான நிலைய விரிவாக்கத்துக்கு விமான நிலைய ஆணையம் மூலம் கேட்கப்பட்ட அளவுக்கு நிலம் கொடுக்கப்பட்டு உள்ளது. விமான ஓடுதளம், பயணிகள் முனையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விமான ஓடுதளம் அமைக்கும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளன. மீதம் உள்ள பணிகள் வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும். பயணிகள் முனையம் அமைக்கும் பணி செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு விமான சேவை அதிகரிக்கப்படும். இரவு நேர விமான சேவையும் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.




மேலும், “தூத்துக்குடி பர்னிச்சர் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு 2 நிறுவனங்கள் தொடங்குவதற்கு உறுதி செய்து உள்ளனர். அவர்கள் விரைவில் பணிகளை தொடங்குவார்கள். அதனை தொடர்ந்து ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நிறுவனங்களும் தொடங்குவார்கள். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய மந்திரியை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.தூத்துக்குடி-சென்னைக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். மதுரையில் நடைபெறும் தென்மண்டல ரெயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தி ரெயில் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.




தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்கான வேலைநாடுநர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  நடந்தது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி,  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 04.03,23 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து 200 நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைதேடும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கும் முகாமாக இருக்கும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்ந்து அதற்கான ஒப்புகை சீட்டை பெறலாம். அந்த ஒப்புகை சீட்டுடன் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த பகுதியில் வேலைதேடும் பலருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவு செய்யாதவர்கள் வந்தாலும் அங்கேயே பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் முன்கூட்டியே பதிவு செய்தால், உங்கள் விவரங்களை நிறுவனங்கள் பார்த்து எளிதில் தேர்வு செய்வதற்கு வசதியாக இருக்கும்.




இதற்கு முன்பு நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பலர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அப்போது சில நிறுவனங்கள் முதல்கட்ட நேர்காணலை முடித்து விட்டு அடுத்தகட்ட நேர்காணலுக்கு அவர்களுடைய நிறுவனத்துக்கு அழைக்கின்றனர். அங்கு நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. நேரடியாகவும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன” என்றார்